சேலம் - சென்னை இடையிலான எட்டு வழி சாலை திட்டம் அரசால் அறிவிக்கப்பட்ட நாள் முதலே விவசாயிகள் பல்வேறு போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் கடந்த ஆண்டு ஜூலை மாதம் தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, சேலம் புதிய பேருந்து நிலையம் அருகே பொருட்காட்சி விழாவை தொடங்கி வைக்க வந்தபோது, எட்டு வழி சாலை திட்டம் வேண்டாம் என்பதை வலியுறுத்தி விவசாயிகள் முதலமைச்சரிடம் மனு கொடுக்க காத்திருந்தனர். காவல்துறையினர் இரவு வெகுநேரமாகியும் அனுமதிக்காத நிலையில், விவசாயிகள் கலைந்து சென்றனர். எனினும் காவல் துறையினர் விவசாயிகள் மீது வழக்கு தொடர, வழக்குக்கான சம்மன் அனுப்பி வைக்கப்பட்டது.
இந்த நிலையில் இன்று விசாரணைக்காக அனைத்து விவசாயிகளும் சேலம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்துக்கு வந்தனர். அப்போது விவசாயிகள் தங்கள் மீது காவல் துறையினரால் போடப்பட்ட பொய் வழக்கை தள்ளுபடி செய்யக்கோரி நீதிபதியிடம் மனு வழங்கினர்.
இது குறித்து விவசாயிகள் கூறுகையில், அமைதியான முறையில் முதல்வரை சந்திக்க காத்திருந்த எங்கள் மீது காவல்துறையினர் வழக்கு போட்டுள்ளது மிகவும் வேதனையளிக்கிறது. நீதிமன்ற உத்தரவின்படி விவசாயிகள் அமைதியாக போராடும் பட்சத்தில், அவர்கள் மீது எந்த ஒரு வழக்கும் தொடர கூடாது என்று தீர்ப்பு வழங்கியுள்ள நிலையில், சேலம் காவல்துறையினர் நீதிமன்ற உத்தரவை கடைப்பிடிக்காமல் எங்கள் மீது வழக்குப்பதிவு செய்து, நீதிமன்றத்தை அவமதித்து உள்ளனர். எங்கள் மீது போடப்பட்டுள்ள பொய் வழக்கை ரத்து செய்யும் வரை நாங்கள் பின்வாங்க மாட்டோம் என்றனர்.
மேலும், 2019ஆம் ஆண்டு எட்டு வழிசாலை திட்டத்திற்காக அறவழியில் போராடும் விவசாயிகள் மீது வழக்குகள் போடக்கூடாது என்று நீதிமன்றம் சொல்லியிருந்த நிலையில், அந்த அரசாணையை மதிக்காமல் எட்டு வழி சாலை திட்டத்திற்கு நிலம் வழங்க மாட்டோம் என்று முதல்வரிடம் மனுக்களை வழங்க சென்ற 12 விவசாயிகள் மீது காவல் துறையினர் வழக்கு தொடுத்துள்ளனர். தொடர்ந்து உயர் நீதிமன்ற தீர்ப்பை மதிக்காமல் நீதிமன்றத்திற்கு எதிராக செயல்படும் சேலம் காவல் துறையினர் மீது நடவடிக்கை எடுத்திட வேண்டும் என்று அவர்கள் தெரிவித்தனர்.