சேலம் மாவட்டம் ஐந்து ரோடு அருகே உள்ள சொர்ணபுரி பகுதியில், பழமை வாய்ந்த அடுக்குமாடிக் கட்டடம் ஒன்று உள்ளது. இந்தக் கட்டடத்தை இடித்து விட்டு, புதிதாக கட்டடம் கட்டும் பணி தற்போது நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், இன்று (ஆக. 31) கட்டட இடிப்புப் பணியில் சேலம் மாவட்டம், ஓமலூர் அருகே உள்ள செம்மண்டபட்டியைச் சேர்ந்த முருகன், தமிழ்மணி, ஸ்ரீதர் ஆகிய மூன்று தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தனர். மூவரும் கட்டடத்தை இடித்து கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக முருகன் மீது சுவர் சரிந்து விழுந்தது .
இதில் இடிபாடுகளில் சிக்கிய முருகன், சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து தகவலறிந்து அப்பகுதிக்கு வந்த சூரமங்கலம் காவல் துறையினர், அவரது உடலை மீட்டு உடற்கூறாய்வுக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த காவல் துறையினர், விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.