சேலம்: முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்தின், இளைய மகன் வீரபாண்டி ராஜா. சட்டப்பேரவை உறுப்பினராக இருந்த இவர், இன்று (அக். 2) காலை மாரடைப்பால் உயிரிழந்தார்.
தனது 58ஆவது பிறந்தநாளை இன்று கொண்டாடவிருந்த வீரபாண்டி ராஜா திடீரென உயிரிழந்த சம்பவம் திமுகவினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
நேரில் அஞ்சலி செலுத்திய ஸ்டாலின்
இதனையடுத்து மதுரையில் கிராமசபைக் கூட்டம், உள்ளாட்சித் தேர்தல் பணியில் ஈடுபட்டிருந்த மு.க. ஸ்டாலின், உடனடியாக அங்கிருந்து தனி விமானம் மூலம் சேலம் வந்தடைந்தார்.
பின்னர் அங்கிருந்து கிளம்பிய அவர், பூலாவரியில் உள்ள வீரபாண்டி ராஜாவின் வீட்டிற்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். இதனையடுத்து அவரது குடும்பத்தினருக்கும் ஆறுதல் கூறினார்.
முன்னதாக அமைச்சர்கள் பொன்முடி, கே.என். நேரு, எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், அன்பில் மகேஷ், சாமிநாதன், மதிவேந்தன் உள்ளிட்ட திமுக சட்டப்பேரவை, நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோர் வீரபாண்டி ராஜாவின் உடலுக்கு நேரில் வந்து அஞ்சலி செலுத்தினர்.
தொடர்ந்து நாளை காலை அடக்கம் செய்யப்பட உள்ள அவரது உடலுக்கு ஆயிரக்கணக்கானோர் அஞ்சலி செலுத்திவருகின்றனர்.
இதையும் படிங்க: 'வீரபாண்டி ராஜா மறைவு தூண் சாய்வதுபோல' - பிறந்த நாளிலேயே மரணம்!