சேலம்: கர்நாடக மாநில காவிரி நீர் பிடிப்பு பகுதியில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதன் எதிரொலியாக, காவிரி ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து மேட்டூர் அணைக்கு வரும் நீரின் வரத்து படிப்படியாக உயர்ந்து வருகிறது.
கடந்த இரண்டு நாட்களாக 46 ஆயிரம் கன அடியிலிருந்து 2 லட்சம் கன அடி அளவுக்கு நீர் வருகிறது. இந்த நிலையில் இன்று (ஆகஸ்ட் 4) காலை 09:30 மணி முதல் மேட்டூர் அணையில் இருந்து வெளியேற்றப்படும் நீர் 1,85,000 கன அடியிலிருந்து 2,00,000 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
அனல் மின் நிலையம், சுரங்க மின் நிலையம் மூலம் 23000 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. 16 கண் பாலம் வழியாக 1,77,000 கன அடி திறக்கப்பட்டுள்ளது. இதனால் மேட்டூர் - எடப்பாடி சாலையில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.
இந்நிலையில், மேட்டூரிலிருந்து சங்கிலி முனியப்பன் கோயில், பொறையூர், ரெட்டியூர், கோல் நாய்க்கன்பட்டி, தெக்கத்திக்காடு, பூலாம்பட்டி, எடப்பாடி உள்ளிட்ட பகுதிகளுக்கு வாகன போக்குவரத்து முற்றிலும் தடைபட்டு உள்ளது. மேலும் காவிரி கரையோர கிராமங்களில் வருவாய்த்துறை அலுவலர்கள் மற்றும் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர் .
கரையோரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடத்திற்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர் . சேலம் உள்ளிட்ட 11 காவிரி டெல்டா மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: முழு கொள்ளளவை எட்டி ஆழியார் அணை...! 2,750 கன அடி உபரி நீர் வெளியேற்றம்...