ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை மாவட்டம் ரத்தினகிரி அருகே மகளுடன் தவறான உறவு வைத்திருந்த இளைஞனைக் கண்டித்த தந்தையை அந்த இளைஞர் வீடு புகுந்து வெட்டிப் படுகொலை செய்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. டி.சி.குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் கிருஷ்ணன். இவரது மகள் திவ்யபாரதி (25). இவருக்கு ஏற்கனவே திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
இதையும் படிங்க: “போரை நேரடியாக பார்க்கும்போது அச்சமாக இருந்தது" - இஸ்ரேலில் இருந்து திரும்பிய திருச்சி மாணவர் பேட்டி!
இந்நிலையில், திவ்யபாரதிக்கும், அதே பகுதியைச் சேர்ந்த கிருபாகரன் என்ற இளைஞர் ஒருவருக்கும் இடையே நட்பு ஏற்பட்டு, அது நாளடைவில் தவறான உறவாக மாறி உள்ளது. இது குறித்து தகவல் அறிந்த திவ்யபாரதியின் தந்தை கிருஷ்ணன், திவ்யபாரதியையும், கிருபாகரனையும் கண்டித்துள்ளார். இருந்தபோதிலும், இருவரும் தவறான உறவில் இருந்து வந்துள்ளனர். இதனால் ஆத்திரம் அடைந்த கிருஷ்ணன், கிருபாகரனை நேரில் சந்தித்து கடுமையாகத் திட்டியுள்ளார்.
இதனால், திவ்யபாரதியின் தந்தை கிருஷ்ணன் மீது கிருபாகரன், கடும் ஆத்திரத்தில் இருந்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று மதுபோதையில் டி.சி.குப்பம் கிராமத்துக்குச் செல்லும் வழியில் கிருஷ்ணனை நேரில் பார்த்த கிருபாகரன், அவரை ரோட்டிலேயே வைத்து சரமாரியாகத் தாக்கியுள்ளார். அது மட்டுமின்றி, கிருஷ்ணனின் வீட்டிற்கு நேரடியாகச் சென்ற கிருபாகரன், போதையில் கையில் மறைத்து வைத்திருந்த கத்தியால் கிருஷ்ணனைச் சரமாரியாகக் குத்தி கொலை செய்துள்ளார்.
இதையும் படிங்க: சென்னை ரயில்வே கோட்டத்தில் அதிரடி டிக்கெட் பரிசோதனை.. ஒரே நாளில் ரூ.20 லட்சத்திற்கு மேல் அபராதம் வசூல்!
இது குறித்து ரத்தினகிரி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், சம்பவ இடத்திற்கு வந்த போலீஸார், ரத்த வெள்ளத்தில் சடலமாகக் கிடந்த கிருஷ்ணனின் உடலை மீட்டு, பிரேதப் பரிசோதனைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த போலீஸார், கொலையாளியான கிருபாகரனைக் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிங்க: மாற்றுத்திறனாளி மகனுக்கு உதவுவதாகக் கூறி பாலியல் தொந்தரவு அளிப்பதாக பெண் புகார்!