ராணிப்பேட்டை: வங்கக் கடலில் உருவாகியுள்ள ஆழந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் புயலாக மாறிய நிலையில், தமிழகம் உள்ளிட்ட பல பகுதிகளில் கனமழை முதல் மிக கனமழையானது பெய்து வருகிறது. தற்போது மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட வட கடலோர மாவட்டங்களில் அதி கனமழையும், ராணிப்பேட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் மழையும் பெய்தது. தற்போது பெய்து வரும் மழையால் தமிழ்நாட்டில் உள்ள பல நீர்நிலைகள் அதன் முழுக் கொள்ளளவை எட்டிய நிலையில், உபரி நீரானது வெளியேறி வருகிறது.
ராணிப்பேட்டை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மிக்ஜாம் புயல் காரணமாக கடந்த இரு நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த மழை காரணமாக நீர்நிலைகள் அதிவேகமாக நிரம்பி வருகின்றது. இந்த நிலையில், ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி அடுத்த பெரும்புலிபாக்கம் கிராமத்தில், மிக்ஜாம் புயல் மழை காரணமாக நெம்புலி ஏரி நிரம்பி, உபரிநீர் வெளியேறி வருகிறது.
பெரும்புலிபாக்கம் ஏரியின் ஓடைக்கால்வாய், முறையாக தூர்வாரப்படாததால் ஏரியில் இருந்து வெளியேறும் உபரிநீர் வயல் வெளிகளுக்குள் புகுந்துள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். இதனால் அறுவடைக்குத் தயாராக இருந்த சுமார் 100 ஏக்கர் நெற்பயிர் தற்போது நீரில் மூழ்கி சேதம் அடைந்துள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர். மேலும், தங்களுக்கு முறையான இழப்பீடு வழங்க வேண்டும் என விவசாயிகள் தமிழக அரசிடம் கோரிக்கை வைத்துள்ளனர்.
இது குறித்து பேசிய விவசாயி ஒருவர், “நாங்கள் கடந்த 40 வருடமாக நெல் விவசாயத்தை பாரம்பரியமாக செய்து வருகின்றோம். எங்களுக்கு விவசாயத்தை தவிர்த்து வேறு தொழில் எதுவும் தெரியாது. தற்போது சுமார் 15 ஆயிரத்திற்கு நெல் பயிரிட்டுள்ளோம். தற்போது ஏற்பட்டுள்ள புயலால் அதிகப்படியான மழை காரணமாக விவசாய நிலத்திற்குள் தண்ணீர் புகுந்துள்ளது.
அதனால் அறுவடைக்குத் தயாராக இருந்த நெற்பயிர்கள் அனைத்தும் சேதமடைந்துவிட்டது. கால்வாய் தூர்வாராத காரணத்தாலும், முறையான பராமறிப்பு இல்லாததாலும் விவசாய நிலம் தண்ணீரில் மூழ்கிவிட்டது. இதற்கான இழப்பீடை தமிழக அரசும், மாவட்ட நிர்வாகமும் செய்து கொடுக்க வேண்டும். இனி வரும் காலங்களில் காய்வாய்கள் முறையாக தூர்வாரப்பட்டால், சிறப்பாக விவசாயம் செய்ய வசதியாக இருக்கும்" என தெரிவித்தார்.