ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் பரசுராமன் (38). மாற்றுத்திறனாளியான இவர் இளங்கலை தமிழ் பட்டப்படிப்பு முடித்துள்ளார். இவருக்கு திருமணம் ஆகி இரண்டு பிள்ளைகள் உள்ளனர். வேலைவாய்ப்பு அலுவலகத்தில் அரசு வேலைக்காக பதிவு செய்து 20 ஆண்டு காலம் ஆன நிலையில், மாற்றுத்திறனாளி இட ஒதுக்கீட்டில் அரசு வேலை வழங்குமாறு பலமுறை ஒருங்கிணைந்த வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்து வந்தார்.
அதைத்தொடர்ந்து ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்திலிரிந்து ராணிப்பேட்டை மாவட்டமாக பிரித்த பிறகு ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலும் பலமுறை வேலை குறித்து மனு அளித்தும், எந்த ஒரு பயனும் இல்லாத காரணத்தினால் மன உளைச்சலுக்குள்ளாகினார்.
இந்நிலையில் இன்று (டிச. 14) பரசுராமன் தனது இரண்டு பிள்ளைகளுடன் ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் பெட்ரோல் கேனுடன் வந்து தீக்குளிக்க முயற்சித்தார். இதனையடுத்து அப்பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த போலீசார், அவரை தடுத்து நிறுத்தி மாவட்ட ஆட்சியர் கிளாஸ்டன் புஸ்பராஜிடம் அழைத்துச் சென்றனர். மாற்றுத்திறனாளியிடம் விசாரணை மேற்கொண்ட மாவட்ட ஆட்சியர் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என வாக்குறுதி அளித்தார்.
இதையும் படிங்க:'மாற்றுத்திறனாளிகள் வாழ்வில் மறுமலர்ச்சி பெற ஆதரவுக்கரம் நீட்டுவோம்'