ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து அனுமதி சீட்டு பெற்று 800க்கும் மேற்பட்ட படகுகளில் மூவாயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன்பிடிக்க நேற்று சென்றுள்ளனர்.
இந்நிலையில், நேற்று இரவு கச்சத்தீவு அருகே மீன்பிடித்து கொண்டிருந்தபோது அங்கு வந்த இலங்கை கடற்படையினர், மீனவர்கள் மீது பாட்டில்கள் கற்களைக் கொண்டு தாக்கியுள்ளனர். இதில் தங்கச்சிமடம் பகுதியைச் சேர்ந்த சுரேஷ் என்ற மீனவர் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. அவருக்கு முதலுதவி அளிக்கப்பட்டு, ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற பின் வீடு திரும்பியுள்ளார்.
அதுமட்டுமல்லாது பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள 50க்கும் மேற்பட்ட படகுகளின் வலைகளை அறுத்து எறிந்து, மீன்பிடி சாதனங்களையும் இலங்கை கடற்படையினர் சேதப்படுத்தியுள்ளனர். இதனால் உயிர் அச்சத்தில் மீனவர்கள் கரை திரும்பினர்.
இலங்கை கடற்படையின் இந்த அத்துமீறலால் ராமேஸ்வரம் பகுதி மீனவர்கள் மிகுந்த அச்சமடைந்துள்ளனர். மாநில அரசும் மத்திய அரசும் உடனடியாக தலையிட்டு மீனவர்கள் பாதுகாப்பாக மீன்பிடிக்க சுமுகமாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை மீனவர் சங்க பிரதிநிதிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.