இராமநாதபுரம் மாவட்டம், கமுதியை அடுத்துள்ள மேலராமநதி ஆரம்ப சுகாதார நிலையத்தில், அப்பகுதியைச் சுற்றியுள்ள மேலராமநதி, காவடிபட்டி, கோரைப்பள்ளம், நீராவி, என்.கரிசல்குளம், கிளாமரம், கூலிப்பட்டி, கீழராமநதி, உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கிராமங்களில் உள்ள விவசாயிகள், கர்ப்பிணிப் பெண்கள், பொதுமக்கள் என அனைத்து தரப்பினரும் மருத்துவ சிகிச்சை பெற்று பயன் அடைந்து வருகின்றனர்.
அதுமட்டுமின்றி கரோனா தடுப்பூசி மையம், ஒன்றிய, மாநில அரசுகளின் தாய்சேய் நல சிறப்புத் திட்டங்கள், சுகாதாரம், தூய்மை என அனைத்திலும் சிறப்பாகச் செயல்பட்டதால், பரமக்குடி சுகாதார மாவட்ட அளவில் கமுதி வட்டாரத்தில் உள்ள மேலராமநதி ஆரம்ப சுகாதார நிலையம் ஒன்றிய அரசின் காயகல்ப் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டது.
இதனையடுத்து அவ்விருதுக்கான பாராட்டு சான்றிதழ், பாராட்டு கேடயம் ஆகியவற்றை நேற்று (ஜூன்.02) ஒன்றிய அரசு அனுப்பி வைத்தது. இதனைத் தொடர்ந்து பரமக்குடி சுகாதாரத்துறை இணை இயக்குநர் ரவீந்திரன் ஒன்றிய அரசின் பாராட்டுச் சான்றிதழையும், கேடயத்தையும் கமுதி ஆரம்ப சுகாதார நிலைய தலைமை மருத்துவர் அசோக், மேலராமநதி மருத்துவர் சண்முகப்பிரியா ஆகியோரிடம் வழங்கினார்.
அப்போது இவ்விருது கிடைக்க காரணமாக இருந்த மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதாரப் பணியாளர்கள், மேலராமநதி ஆரம்ப சுகாதார நிலைய கிராம செவிலியர்கள், ஊழியர்கள் என அனைவரையும் பாராட்டி, வாழ்த்து தெரிவித்தார்.
இதையும் படிங்க: 'காய கல்ப்' விருதை வென்ற செங்கோட்டை அரசு மருத்துவமனை!