கரோனா ஊரடங்கு உலகம் முழுவதிலும் பலரது வாழ்க்கையைப் புரட்டிப் போட்டுள்ளது. அதிகமானோர் வேலையை இழந்து வறுமையில் வாடும் சூழ்நிலை ஏற்படுத்தியுள்ளது. அதுமட்டுமின்றி பெரிய தொழில் நிறுவனங்கள் மிகப்பெரும் பொருளாதார இழப்பைச் சந்தித்துவருகின்றன. இந்நிலையில், ஊரடங்கின்போதும் மாதம் 50 ஆயிரம் ரூபாய் வரை கோழிப்பண்ணை மூலமாக லாபம் ஈட்டிவருவதாகத் தெரிவிக்கின்றார், பரமக்குடி பகுதியைச் சேர்ந்த பெண் தொழிலில் முனைவோரான ராஜலெட்சுமி.
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே உள்ள வேந்தோணி கிராமத்தைச் சேர்ந்த இவர், ஆரம்பத்திலிருந்தே சுய தொழில் செய்வதில் ஆர்வமாக இருந்துள்ளார். அதனால் மாடுகளை வைத்து பால் பண்ணை நடத்திவந்துள்ளார்.
அதனைத் தொடர்ந்து கோழி வளர்ப்பின் மீது ஏற்பட்ட விருப்பத்தால், கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக நாட்டுக்கோழி வளர்ப்பில் ஈடுபட்டுவருகிறார். கடந்த சில வருடங்களாக கருங்கோழி வளர்ப்பு, அதன் நன்மைகள் குறித்து அறிந்துகொண்டு அதையும் வளர்த்துவந்துள்ளார். அதில், மாதம் 25,000 ரூபாய் வரை சம்பாதித்துவந்துள்ளார்.
கருங்கோழி கிலோவுக்கு 500 ரூபாய் முதல் 600 ரூபாய் வரை விற்பனையாகிவந்தது. மார்ச் மாதம் கரோனா பரவலைத் தொடர்ந்து மக்கள் நோய் எதிர்ப்புச் சக்தி மிகுந்த உணவுகளை நோக்கி நகரத் தொடங்கினர். குறிப்பாக நாட்டுக்கோழி, கருங்கோழியில் அதிக நோய் எதிர்ப்புத் திறன் இருப்பதை மக்கள் உணர்ந்து, அதனை வாங்கி உண்ணுவதில் ஆர்வம் காட்டினர். இதனால் கோழிக் கறியின் விலை தாறுமாறாக உயர்ந்தது. இதனால் கருங்கோழியின் விலை கிலோ ஒன்றுக்கு ஆயிரம் ரூபாய் வரை விற்பனையாகத் தொடங்கியது.
இதனால் ஊரடங்கின்போது ராஜலட்சுமிக்கு மாத வருவாயாக 30 ஆயிரம் ரூபாயிலிருந்து 60 ஆயிரம் ரூபாய் வரை கிடைத்தது. இதுகுறித்து ராஜலட்சுமி கூறுகையில், "கடந்த 15 ஆண்டுகளாக கோழிப்பண்ணை நடத்திவருகிறேன். அதன்மூலம் மிகப்பெரிய அளவில் பணம் சம்பாதித்துவருகிறேன்.
இந்தக் கோழி வளர்ப்பு எனக்கு மிகப்பெரிய அளவில் தன்னம்பிக்கையைக் கொடுத்துள்ளது. முன்பு மாடு, கோழி இறைச்சி, முட்டை, பால் மூலமாக மாத 40 ஆயிரம் ரூபாய் வருமானம் கிடைத்தது. தற்போது கோழி விற்பனையில் மட்டுமே மாதம் 60 ஆயிரம் ரூபாய் வரை கிடைக்கிறது.
அரசு வேலையில் கூட இவ்வளவு வருமானம் கிடைக்காது என்று என் மகனும் தற்போது என்னுடன் உதவியாக இந்தக் கோழிப் பண்ணையில் ஆர்வமாக ஈடுபட்டுவருகிறான். பெண்கள் வீட்டில் ஆண்களின் வருமானத்தை முற்றிலும் நம்பியிருக்காமல் இதுபோன்று வீட்டிலேயே இருந்து செய்யக்கூடிய கோழி வளர்ப்பில் ஈடுபட்டால் மிகப்பெரிய அளவு லாபம் கிடைக்கும்" எனத் தெரிவித்தார்.
கோழி வளர்ப்பு குறித்து அவரது மகன் அஜித்குமார் பேசியபோது, "நான் டிப்ளமோ பொறியியல் முடித்து இரண்டு வருடங்களாக வேலை தேடி வருகிறேன். இந்த ஊரடங்கினால் வீட்டுக்கு வந்தேன். வீட்டிலேயே ஆடு, கோழி, கறி, முட்டை போன்றவற்றின் மூலம் நாள் ஒன்றிக்கு 2 ஆயிரம் ரூபாய் வருவாய் கிடைப்பதைப் பார்க்கும்போது, நானும் அம்மாவுடன் சேர்ந்து கோழிப் பண்ணையைக் கவனித்துக்கொள்ள முடிவெடுத்து, அதில் தீவிரமாக ஈடுபட்டுவருகிறேன்.
வெளியில் வேலை செய்வதைவிட வீட்டில் இருந்தபடியே கோழி வளர்ப்பில் ஈடுபடுவது எளிதாகவும் அதிக வருமானம் அளிக்கக்கூடியதாகவும் இருக்கிறது" என்றார்.
இதையும் படிங்க: விஏஓ மட்டுமல்ல நான்... சமூக சேவையில் ஈடுபடும் விருதுநகர் இளைஞர்!