தமிழ்நாட்டில் சட்டப்பேரவைத் தேர்தல் நாளை (ஏப்ரல்.6) நடைபெறவுள்ள நிலையில் அதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மேலும், நேற்றுடன் (ஏப்.04) இதற்கான தேர்தல் பரப்புரையும் ஓய்ந்தது.
முன்னதாக, ராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள நான்கு சட்டப்பேரவைத் தொகுதிகளுக்குட்பட்ட சில இடங்களில் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா நடைபெறுவதாக தேர்தல் பறக்கும் படையினருக்குத் தகவல் கிடைத்ததையடுத்து, அலுவலர்கள் தீவிர கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் ராமநாதபுரம், திருவாடானை சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட அம்மன் கோயில் பகுதியில் வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்யப்பட இருப்பதாக காவல் துறையினருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.
இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல் துறையினர், சந்தேகத்திற்கு இடமான முறையில் இரண்டு இருசக்கர வாகனத்தில் வந்தவர்களை மறித்தனர்.
காவல் துறையினரைக் கண்டவுடன் வாகனத்தில் அவர்கள் அங்கிருந்து தப்பியோடினர். பின்னர், வாகனத்தை சோதனை செய்ததில், 79 ஆயிரம் ரூபாய் பணம் அதில் இருந்தது தெரியவந்தது.
இதையடுத்து பணத்தை பறிமுதல் செய்து, காவல் துறையினர் மேற்கொண்ட முதற்கட்ட விசாரணையில், பொதுமக்களுக்கு கொடுப்பதற்காக அப்பணம் எடுத்துச் செல்லப்பட்டது உறுதி செய்யப்பட்டது.
மேலும், இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், தப்பியோடிய நபர்களை தீவிரமாகத் தேடி வருகின்றனர். அவர்கள் எந்தக் கட்சியை சேர்ந்தவர்கள் என விசாரணை நடத்தியும் வருகின்றனர்.
இதையும் படிங்க: ஈரோட்டில் ரூ. 8.20 லட்சம் பறிமுதல்