ராமநாதபுரம் அருகேயுள்ள பேராவூர் கிராமத்தில் மேற்கு பகுதி தலைவராக இருப்பவர் கருப்பையா. இவர் சிறைத்துறையில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்.
தற்போது தனது உறவினர்களை வைத்து கந்து வட்டி கொடுப்பது, அதே ஊரில் இருக்கும் கிழக்குப் பகுதி மக்களை ஊரை விட்டு ஒதுக்கி வைப்பது போன்ற செயல்களில் ஈடுபட்டுவருகிறார்.
இது குறித்து கிழக்குப் பகுதியில் வசிக்கும் மக்கள் காவல் துறை, மனித உரிமை ஆணையத்திடம் புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை.
இதனால் கருப்பையாவின் அத்துமீறல் நாளுக்கு நாள் அதிகரித்துள்ளது. இந்நிலையில் நேற்று (ஆக23) கருப்பையாவும் அவரது குடும்பத்தினரும் இணைந்து கிழக்குப் பகுதியில் வசிக்கும் ரவிச்சந்திரன், முனியசாமி உள்ளிட்ட பலரை சரமாரியாக தாக்கியுள்ளனர்.
இது குறித்து கிழக்கு கிராமத் தலைவர் நடராஜ் தலைமையில் 100-க்கும் மேற்பட்டோர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண்குமாரிடம் மனு கொடுப்பதற்காகத் திரண்டனர்.
இதனைத் தொடர்ந்து காவல் துறையினர் காரோனா ஊரடங்கு அமலில் உள்ளது எனக் கூறி ஊர் சார்பாக பிரதிநிதிகளை மட்டும் அழைத்து சென்றனர். பின்னர், காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மனுவை அளித்துவிட்டு கிழக்குப் பகுதி மக்கள் கலைந்து சென்றனர்.