ராமநாதபுரம் மாவட்டம் திருவாடனைக்குட்பட்ட உப்பூரில் சுமார் 12 ஆயிரத்து 655 கோடி செலவில் சூப்பர் கிரிட்டிக்கல் தொழில்நுட்பத் திறனுடனான 800 மெகாவாட் கொண்ட இரண்டு அனல் மின்நிலையங்கள் 1600 மெகாவாட் உற்பத்தியில் அமையவுள்ளது. இதற்காக சுமார் 912 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்தி பணிகள் நடைபெற்று வருகின்றன.
இதுகுறித்து எந்த ஒரு முன்னறிவிப்பும் தங்களுக்கு தரவில்லை என்றும் , தற்பொழுது கடலினுள் 7.6 கிலோமீட்டருக்கு மண்ணைக் கொட்டி பாலம் அமைக்கும் பணி நடைபெற்று வருவதாகவும் கூறும் அப்பகுதி மக்கள், கடலில் பாலம் அமைத்த கழிவுநீரை கடலினுள் விடும்பொழுது கடலின் வளம் அழியும், தினமும் கடலுக்கு சென்று மீன் பிடிக்கும் 20 கிராம மீனவர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாக மாறும் என்றுக்கூறி இதற்கு எதிராக போராட்டம் நடத்தினர்.
இப்போராட்டம் குறித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு தகவல் கொடுத்ததன் அடிப்படையில் மாவட்ட ஆட்சியரின் நேரடி உதவியாளர் கேசவன் தாஸ் மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனால் மாவட்ட ஆட்சியர் வரவேண்டும் என்று தெரிவித்த நிலையில், மாவட்ட ஆட்சியருடன் தொலைபேசியில் பேசிய கிராம மக்கள், இதுகுறித்து விரைவில் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்றும், பேச்சுவார்த்தை நடத்தும் வரை உப்பூர் அனல் மின் நிலையத்தில் கடலினுள் பாலம் அமைக்கும் பணி நிறுத்தி வைக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர்.
ஆட்சியர் பேச்சு வார்த்தை நடத்தி பிறகு முடிவு சொல்வதாக தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து மக்கள் தங்கள் போராட்டத்தை ஒத்திவைத்தனர்.