தமிழ்நாடு அரசு நேற்றைய தினம் (ஆகஸ்ட் 17) முதல் விண்ணப்பிக்கும் அனைவருக்கும் இ-பாஸ் கிடைக்கும் என்ற உறுதியளித்த நிலையில் பொதுமக்கள் அனைவரும் தங்கள் தேவைக்காக வெளி மாவட்டங்களுக்குச் சென்று வரத் தொடங்கியுள்ளனர்.
இந்நிலையில் ஆவணி அமாவாசை நாளான இன்று ராமேஸ்வரம் அக்னி தீர்த்தக் கடற்கரையில் மதுரை, சிவகங்கை, பழனி, திண்டுக்கல் போன்ற வெளிமாவட்டங்கள், கேரளா போன்ற வெளிமாநிலங்களிலிருந்தும் பக்தர்கள் புனித நீராடி ராமநாதசுவாமி கோயில் கோபுரம் முன்பாக நின்று வேண்டி செல்கின்றனர்.
பக்தர்கள் வருகையால் அங்கு வியாபாரம் தொடங்கியுள்ளது. 150 நாள்களுக்குப் பிறகு வெளி மாநிலம், வெளி மாவட்ட பக்தர்கள் ராமேஸ்வரம் வருவது வியாபாரிகளிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இருந்தபோதும் வெளி மாவட்டங்களிலிருந்து வரும் பக்தர்கள் முறையாகத் தகுந்த இடைவெளி, முகக்கவசம் உள்ளிட்ட அரசு வெளியிட்டுள்ள அறிவுறுத்தல்களைக் கடைப்பிடிக்க வேண்டும் என்பதே ராமேஸ்வரம் கோயில் அருகில் கடை வைத்திருக்கும் வியாபாரிகளின் நோக்கமாக இருந்துவருகிறது.