ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி ஆயிரவைசிய கல்வியியல் கல்லூரியில் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையின் சார்பாக தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் நடத்தப்படும் குரூப்-II போட்டித் தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பை மாவட்ட ஆட்சியர் வீர ராகவ ராவ் தொடக்கி வைத்தார்.
அதன்பின் அவர் பேசுகையில், ‘தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையின் மூலம் இளைஞர்கள் நலனுக்காக பல்வேறு வேலைவாய்ப்பு முகாம்களை நடத்தி வருகின்றது. அதேபோல், இளைஞர்கள் பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கு தங்களைத் தயார் செய்து கொள்ள ஏதுவாக இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.
அதனடிப்படையில், பரமக்குடியில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணயைம் குரூப்-I, குரூப்-II உள்ளிட்ட போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் தொடக்கி வைக்கப்பட்டுள்ளது. அரசுப் பணியில் சேர்வதை லட்சியமாகக் கொண்டு பயிற்சி செய்யும் இளைஞர்களுக்கு இது நல்லதொரு வாய்ப்பாக அமைந்துள்ளது. தேர்வு எழுதுபவர்களின் தனித்திறன், நிர்வாகத் திறன், சமயோஜித செயல்பாடு போன்ற பண்புகளை திறன் அறிவதற்காகவே போட்டித் தேர்வுகள் நடத்தப்படுகின்றன.
எனவே, இளைஞர்கள் தயக்க சிந்தனையை தவிர்த்து தன்னம்பிக்கையுடன் போட்டித் தேர்வுகளை எதிர்கொள்ள வேண்டும். மேலும் இளைஞர்கள் கவன சிதறலின்றி ஒரு மனதாக தங்களைத் தயார் செய்துகொள்ளும் பட்சத்தில் குடிமைப்பணித் தேர்வு, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வு உள்ளிட்ட எத்தகைய தேர்வானாலும் எளிதில் தேர்ச்சி பெறலாம் என தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில், பரமக்குடி சட்டப்பேரவை உறுப்பினர் சதன் பிரபாகர், வருவாய் கோட்டாட்சியர் தங்கவேல் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க: தொடர்ந்து வெளியாகும் வினாத்தாள்: நடவடிக்கை எடுப்பதில் சுணக்கம்!