ராமநாதபுரம்: கிழக்கு மத்திய வங்கக்கடல் பகுதியில் கடந்த சில தினங்களுக்கு முன்பு குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவானது. இன்று அந்த காற்றழுத்த தாழ்வு நிலை புயலாக மாறி, அந்தமானில் இருந்து வடமேற்காக 570 கிலோ மீட்டர் தூரத்திலும், ஒடிசா பாராட்டி பகுதியிலிருந்து தென் கிழக்காக 690 கிலோமீட்டர் தொலைவிலும், ஒடிசாவின் பாலசோர் பகுதியில் இருந்து தென்கிழக்காக 670 கிலோ மீட்டரிலும், மேற்கு வங்கத்தின் பகுதியின் வடகிழக்கிலிருந்து 670 கிலோ மீட்டர் தொலைவிலும் நிலை கொண்டுள்ளது. இந்தப்புயலுக்கு 'யாஸ்' எனப் பெயரிடப்பட்டுள்ளது. புயல் எச்சரிக்கை காரணமாக, பாம்பன் துறைமுகத்தில் 1ஆம் எண் புயல் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
இந்நிலையில் ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரம் - தனுஷ்கோடி பகுதியில் கடல்சீற்றத்துடன் காணப்படுகிறது. முகுந்தாயர் சத்திரம் கடல் சீற்றத்தால் கடல் அலைகள் ஜெட்டி பாலத்தில் மோதி, 30 அடி உயரத்திற்கு சீறிப்பாய்கின்றன. மேலும், ராமேஸ்வரம் தீவுப்பகுதி முழுவதும், கடந்த இரண்டு நாட்களாக பலத்த சூறைக்காற்று வீசி வருகிறது.
இதனால் மீனவர்களிடையே அச்சம் ஏற்பட்டுள்ளது. மீனவர்கள் நாட்டுப் படகு மூலம் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என ஏற்கெனவே அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: கண்ணுக்கு விருந்து: கடலில் விடப்பட்ட 130 சித்தாமை குஞ்சுகள்!