ராமநாதபுரம் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழையை எதிர்பார்த்து மாவட்டத்தில் 1,20,000 ஹெக்டேர் நெல் சாகுபடி செய்யப்படுகிறது . இதே போன்று சிறுதானியங்கள், எண்ணெய் வித்து பயிர்கள் 6000 ஹெக்டேர் , பயறு வகைகள் 5000 ஹெக்டேரில் சாகுபடி செய்யப்படுகின்றன . மாவட்டத்தின் சூழலுக்கு ஏற்ப குறைந்த வயதுடைய, வறட்சியை தாங்கக்கூடிய ரகங்களின் நெல் ரகங்களை அவ்வப்போது விவசாயிகளுக்கு மாவட்ட நிர்வாகத்தினர் தெரிவித்து வருகின்றனர்.
இதன் தொடர்ச்சியாக ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அவர்களின் அறிவுரையின் பேரில் பாபா அணு ஆராய்ச்சி நிறுவனத்தினர் கண்டுபிடிப்புகளை விவசாயிகளுக்கு தெரியப்படுத்தும் வகையில் அந்த மையத்தின் பயிர் ரகங்களின் விவரத்தினை விவசாயிகளுக்கு எடுத்துரைத்தார் .
அதையடுத்து பாபா அணு ஆராய்ச்சி நிலையத்தின் நெல்லான டீடிசிஎம்-1 டுப்ராஜ் (TDCM-1 Dubraj) என்ற புதிய ரகத்தினை ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் முதன் முறையாக அறிமுகம் செய்து விவசாயிகளிடம் திறன் அறியும் திடல் அமைக்கும் பொருட்டு 5 கிலோ நெல் விதையை பரமக்குடி வட்டாரத்தில் வலையனேந்தல் கிராமத்தைச் சேர்ந்த துரைராஜ் என்ற முன்னோடி விவசாயிக்கு வழங்கினார் . பின் மாநிலத்தில் முதல் முறையாக விதைக்கப்படும் அந்த நெல் ரகத்தை ஆட்சியர் விவசாய நிலத்தில் இறங்கி விவசாயியுடன் சேர்ந்து விதைத்தார்.