தமிழ்நாட்டில் உள்ளாட்சித் தேர்தல் டிசம்பர் 27, 30 ஆகிய தேதிகளில் இருகட்டமாக நடைபெறவுள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த டிசம்பர் 9ஆம் தேதி தொடங்கியது. அதன்படி பலர் தங்களது வேட்புமனுவை தாக்கல் செய்தனர்.
இந்நிலையில், உள்ளாட்சித் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று நிறைவடைந்தது.
ராமநாதபுரம்:
ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள 11 ஒன்றியங்களுக்கு உட்பட்ட 3691 உள்ளாட்சிப் பதவிகளுக்கு நேற்றய தினம் வரை 4,723 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். 3,075 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு 2,711 பேரும் ஊராட்சித் தலைவர் பதவிக்கு 1,479 பேரும் ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவிக்கு 492 பேரும் மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு 41 பேர் என மொத்தமாக 4,723 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர்.
இறுதிநாளான இன்று மாவட்டம் முழுவதிலும் உள்ள ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் திமுக, அதிமுக, அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் உள்ளிட்ட பிரதான கட்சிகள், சுயேச்சை வேட்பாளர்கள் ஆர்வமுடன் அந்தந்த பகுதிகளில் இருக்கும் ஒன்றிய அலுவலகத்திற்கு சென்று வேட்புமனு தாக்கல் செய்துவருகின்றனர். உள்ளாட்சித் தேர்தலைப் பொறுத்தவரை சுயேச்சைகள் அதிக அளவில் வேட்புமனு தாக்கல் செய்துவருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
கரூர்:
கரூர் ஊராட்சி ஒன்றிய அலுவகத்திற்கு அதிமுக சார்பில் தமிழ்நாடு போக்குவரத்துத் துறை அமைச்சரும் கட்சியின் மாவட்ட செயலாளருமான எம்.ஆர். விஜயபாஸ்கர் தலைமையில் அதிமுக வேட்பாளர்கள் தங்களது வேட்புமனுக்களை தாக்கல் செய்தனர். இதேபோல் முன்னாள் தமிழ்நாடு போக்குவரத்துத் துறை அமைச்சரும் மாவட்ட திமுக பொறுப்பாளருமான செந்தில்பாலாஜி தலைமையில் திமுக, அதன் தோழமை கட்சியினருடன் வந்த வேட்பாளர்கள் தேர்தல் அலுவலர்களிடம் தங்களது வேட்புமனுக்களை தாக்கல் செய்தனர். வேட்புமனு தாக்கல் செய்ய இன்று இறுதிநாள் என்பதால் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் திருவிழா போல் காட்சியளித்தது.
தருமபுரி:
தருமபுரி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் அதிமுகவினர் பாப்பிரெட்டிப்பட்டி சட்டப்பேரவை உறுப்பினர் கோவிந்தசாமி முன்னிலையில் அக்கட்சி அலுவலகத்திலிருந்து ஊர்வலமாக வந்து வேட்புமனுவை தாக்கல் செய்தனர். வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாள் என்பதால் தருமபுரி, காரிமங்கலம், பென்னாகரம், நல்லம்பள்ளி, பாலக்கோடு, அரூர், பாப்பிரெட்டிப்பட்டி பகுதிகளில் உள்ள ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் அதிமுக கூட்டணி கட்சியினர், திமுக வேட்பாளர்கள் அதிகளவு வேட்புமனுவை தாக்கல் செய்தனர்.
ஈரோடு:
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம், பவானிசாகர், தாளவாடி ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் உள்ள நான்கு மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர்கள், 38 ஊராட்சி ஒன்றியக்குழு உறுப்பினர்கள், 40 ஊராட்சித் தலைவர் பதவிகளுக்கு வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டது.
இதில் அதிமுக, திமுக, சிபிஎம், சிபிஐ, காங். உள்ளிட்ட கூட்டணி கட்சியினர் சார்பில் வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டது. அதிமுக, திமுக கட்சியினர் ஊர்வலமாக வந்து வேட்புமனுவை தாக்கல் செய்தனர். வேட்புமனு தாக்கல் செய்யும் வேட்பாளர்கள் தங்கள் ஆதரவாளர்களுடன் வந்ததால் சத்தியமங்கலம் ஒன்றிய அலுவலகத்தில் கூட்டம் அலைமோதியது. காவல் துறையினர் கூட்டத்தை கட்டுப்படுத்தினர். இன்று காலை 10.30 மணி முதல் 12.00 வரை எமகண்டம் என்பதால் வேட்புமனு எவரும் தாக்கல் செய்யவில்லை. அதன்பிறகு வேட்புமனு களைகட்டியது.
விருதுநகர்:
வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாளான இன்று விருதுநகர் மாவட்டத்தில் ஊராட்சி ஒன்றிய பகுதிகளுக்கு உட்பட்ட கிராம ஊராட்சி மன்ற தலைவர், ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர், மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் உள்ளிட்ட பதவிகளுக்கு அனைத்து கட்சியினர், சுயேச்சை என ஒட்டுமொத்தமாக இறுதிநாளான இன்று ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பலர் மனு தாக்கல் செய்தனர்.
நாகப்பட்டினம்:
இறுதிநாளான இன்று அதிமுக, திமுக உள்ளிட்ட அரசியல் கட்சியினர் போட்டி போட்டுக்கொண்டு வேட்புமனு தாக்கல் செய்தனர். நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள நாகை, கீழையூர், கீழ்வேளூர் உள்ளிட்ட மாவட்டத்தின் அனைத்து ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களிலும் அனைத்து கட்சியினர், சுயேச்சை வேட்பாளர்கள் தீவிரமாக வேட்புமனு தாக்கல் செய்தனர்.