ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே உள்ள பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 115ஆவது ஜெயந்தி விழாவும் 57ஆவது குருபூஜை விழாவும் வருகின்ற அக்டோபர் 28, 29, 30 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது .
இதனை முன்னிட்டு பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் நினைவிடத்தில் வைக்கப்பட்டுள்ள அவரது திருவுருவச் சிலைக்கு முன்னாள் முதலமைச்சரும் அதிமுகவின் பொதுச்செயலாளருமான ஜெயலலிதா அளித்த 13.7 கிலோ எடைகொண்ட தங்கக் கவசத்தை வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை, தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் அணிவித்தார்.
இதில் முன்னாள் அமைச்சர் மணிகண்டன், அதிமுக மாவட்ட கழகச் செயலாளர் முனியசாமி, பரமக்குடி சட்டப்பேரவை உறுப்பினர் சதன் பிரபாகரன், மாவட்ட ஆட்சியர் வீர ராகவ ராவ், மாவட்ட காவல் கண்கணிப்பாளர் ஓம்பிரகாஷ் மீனா ஆகியோர் கலந்துகொண்டனர்.
பின்னர் தங்கத்திற்குத் துப்பாக்கி ஏந்திய காவல் துறை பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. இக்கவசமானது பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டு, மீண்டும் மதுரையில் அமைந்துள்ள தனியார் வங்கியில் வைக்கப்படும்.