ராமநாதபுரம் மாவட்டம் மண்டபத்தில் இலங்கை அகதிகள் முகாம் உள்ளது. தற்போது இங்கு 350க்கும் மேற்பட்ட குடும்பங்களில் 1,700க்கும் மேற்பட்டோர் வசித்துவருகின்றனர். இந்த முகாமில் தமிழ்நாடு சிறப்பு காவல் துறையினர் சுழற்சி முறையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுவருகின்றனர். அகதிகளின் அன்றாட நடவடிக்கைகள் நுழைவு வாயில் முன் சிசிடிவி கேமரா மூலம் கண்காணிக்கப்படுகிறது.
வெளியூர் செல்ல விரும்பும் அகதிகள் போலீசார், தனி துணை ஆட்சியரிடம் உரிய அனுமதி பெற வேண்டும்.
இந்நிலையில், கடந்த சில ஆண்டுகளுக்கு முன் இலங்கை யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த உதயகலா, தயாபர ராஜ் தம்பதி மூன்று பெண் குழந்தைகளுடன் விமானம் மூலம் தமிழ்நாட்டிற்கு வந்தனர்.
இவர்களுக்கு விடுதலை புலிகள் இயக்கத்துடன் தொடர்பு இருப்பது காவல் துறை விசாரணையில் தெரிய வந்தது. இதனையடுத்து, இவர்களது குடும்பத்தை மண்டபம் அகதிகள் முகாமில் தங்கவைத்து கூடுதல் பாதுகாப்பு அளிக்கப்பட்டது. உடல் நலம் பாதிக்கப்பட்ட கணவருக்கு மதுரை, ராமநாதபுரம் பகுதிகளில் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனைகளுக்கு உதயகலா அழைத்துச் சென்றார்.
இந்நிலையில், இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்தது. நான்கு குழந்தைகளுடன் மே 20ஆம் தேதி முகாமை விட்டு வெளியேறிய இந்த தம்பதி முகாமிற்கு மீண்டும் திரும்பாததால் ராமநாதபுரம் ஓம்சக்தி நகரில் சென்று பார்த்தபோது குடும்பத்துடன் மாயமானது தெரிந்தது.
இது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் மண்டபம் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரனை மேற்கொண்டு வருகின்றனர். உதயகலா, பலரிடம் லட்சக்கணக்கான ரூபாய் கடன் வாங்கி உள்ளதாக கூறப்படுகிறது. தன் மீது பண மோசடி புகார் கொடுக்கப் போவதை அறிந்ததால் உதயகலா நான்கு குழந்தைகள் மற்றும் கணவருடன் மாயமான தெரிகிறது. மேலும், அவர்கள் போலி பாஸ்போர்ட்டில் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து சென்றிருக்கலாம் என கூறப்படுகிறது.