திருநெல்வேலி மாவட்டம் தாமிரபரணி ஆற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு காரணமாக கரையோரம் வசிக்கும் மக்கள் கடும் பாதிப்புக்கு ஆளாகி உள்ளனர். மாவட்டம் முழுவதும் அவ்வப்போது மிதமான மழையும், கன மழையும் பெய்து வருவதால் பாபநாசம், மணிமுத்தாறு அணைகளில் இருந்து தாமிரபரணி ஆற்றில் இருந்து உபரி நீர் திறந்து விடப்படுகிறது. 40 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்கப்பட்ட நிலையில், இன்று (ஜனவரி 13) மழை குறைந்ததால் 20 ஆயிரம் கனஅடியாக குறைக்கப்பட்டது.
வழக்கமாக 5 ஆயிரம் முதல் 10 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்து விட்டாலே தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் சூழலில், 40 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டதால், பெரும் வெள்ளம் ஏற்பட்டது. ஆற்றின் இருபுறமும் கரைகளை தொட்டபடி வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடுவதால், கரையோரம் உள்ள வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்துள்ளது. குறிப்பாக குறுக்குத்துறை, வண்ணாரப்பேட்டை ஆகிய பகுதிகளில் கரையோரம் உள்ள வீடுகளுக்குள் வெள்ள நீர் புகுந்ததால், அப்பகுதி மக்கள் அனைவரும் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், திருநெல்வேலி மாவட்டத்தில் 1992ஆம் ஆண்டுக்குப் பிறகு தற்போதுதான் பெரும் வெள்ளம் ஏற்பட்டுள்ளதாக கூறிய இப்பகுதி மக்கள், கரோனோ காலத்தில் கூட இவ்வளவு கஷ்டத்தை அனுபவிக்க இல்லை என்றும் தற்போது ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கால் கடும் சிரமத்துக்கு ஆளாகியிருப்பதாக கூறினர்.
நெல்லை வண்ணாரப்பேட்டையில் உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட சலவைத் தொழிலாளர்களின் வீடுகளுக்குள் வெள்ள நீர் புகுந்துள்ள நிலையில், உணவு உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து கொடுக்குமாறு மாவட்ட நிர்வாகத்திடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.