தமிழ்நாட்டில் புகையிலை உள்ளிட்ட போதைப் பொருள்கள் விற்பனைக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூர் பகுதிகளில் புகையிலை பாக்கெட்டுகள் விற்பனை செய்யப்படுவதாக, துணை காவல் கண்காணிப்பாளர் (டிஎஸ்பி) ராகவேந்திரா ரவிக்கு தகவல் கிடைத்தது.
இதன் பேரில் முதுகுளத்தூர் காவல் ஆய்வாளர் கதிர்வேல் தலைமையிலான காவலர்கள் அப்பகுதியில் தீவிர ரோந்து சென்றனர்.
அப்போது முதுகுளத்தூர் கிழக்குத் தெரு பேருந்து நிறுத்தம் அருகே தடை செய்யப்பட்ட புகையிலை உள்ளிட்ட போதைப் பொருள்களை விற்பனை செய்த பரமக்குடியைச் சேர்ந்த சிவராமன், பாபு, சரவணன், ராம்பாபு, கீழக்குளத்தைச் சேர்ந்த முத்தமிழ்ச்செல்வன் ஆகிய ஐந்து பேரையும் காவல் துறையினர் கைது செய்தனர்.
தொடர்ந்து விற்பனைக்காக வைத்திருந்த 203 கிலோ புகையிலை உள்ளிட்ட போதைப்பொருள் பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. தடை செய்யப்பட்ட பொருள்களை விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என, முதுகுளத்தூர் துணை காவல் கண்காணிப்பாளர் ராகவேந்திரா ரவி எச்சரித்துள்ளார்.