ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே பசும்பொன்னில் முத்துராமலிங்கத் தேவர் குருபூஜை விழா ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 30இல் அரசு விழாவாக கொண்டாடப்படுவது வழக்கம். இந்த விழாவில் தமிழ்நாடு முதலமைச்சர், அமைச்சர்கள், சமுதாயத் தலைவர்கள், பொதுமக்கள் என ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்பார்கள்.
கரோனா காலம் என்பதால் கடந்த ஆண்டு குரு பூஜை விழா கட்டுப்பாடுகளுடன் பொதுமக்கள் அனுமதியின்றி நடைபெற்றது. இதையடுத்து இந்த ஆண்டு விழாவில் பொதுமக்களுக்கு அனுமதி அளிக்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
சுவர் விளம்பரம் செய்யும் பணி தீவிரம்
தமிழ்நாடு முதலமைச்சரை பசும்பொன் தேவர் குருபூஜைக்கு வரவேற்கும்விதமாக சுவர் விளம்பரங்களுக்கு கமுதி, அதனைச் சுற்றியுள்ள கிராமப் பகுதிகளில் சாலையோரம் உள்ள கட்டட உரிமையாளர்களிடம் அனுமதி பெற்று திமுகவினர் வெள்ளையடித்துவருகின்றனர்.
கடந்த ஒரு வாரத்துக்கு முன்னர் முதுகுளத்தூர் தொகுதி எம்எல்ஏவும், தமிழ்நாடு போக்குவரத்துத் துறை அமைச்சருமான ஆர்.எஸ். ராஜகண்ணப்பன் ஆதரவாளர்களான கமுதி ஒன்றிய திமுக துணைச் செயலாளர் நேதாஜி சரவணன் தரப்பினர், பார்த்திபனூர் சாலையில் உள்ள சுவர்களில் சுத்தம் செய்து, அதில் அமைச்சரின் பெயரை எழுதிவைத்திருந்தனர்.
இதையடுத்து கமுதி திமுக ஒன்றியச் செயலாளர் வி. வாசுதேவன், அவரது தரப்பினர் 10-க்கும் மேற்பட்டோர் அமைச்சர் தரப்பினர் எழுதிய சுவரில் மீண்டும் வெள்ளையடித்து கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று சுவர் விளம்பரப் பணிகளை மேற்கொண்டுள்ளனர். இது குறித்து தகவல் அறிந்துவந்த அமைச்சரின் ஆதரவாளர்களுக்கும், கமுதி ஒன்றியச் செயலாளர் வி. வாசுதேவன் தரப்பினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு பிரச்சினை முற்றியது.
16 பேர் மீது வழக்கு
இது தொடர்பாக கிடைத்த தகவலின் அடிப்படையில் காவல் துறையினர் தலையிட்டு இருதரப்பினரையும் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரித்தனர். அப்போது, ஒன்றியச் செயலாளர் வாசுதேவனும், ஒன்றியத் துணைச் செயலாளர் நேதாஜி சரவணனும் தனித்தனியாக அபிராமம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
இந்தச் சம்பவம் தொடர்பாக கமுதி, திமுக ஒன்றியச் செயலாளர் வி. வாசுதேவன், அவரது மகன் வசந்தமோகன், பாரதிதாசன், மாவட்ட இலக்கிய அணி அய்யனார், நந்திசேரி நாகராஜ், முனியசாமி, சக்திவேல், ஏ.எஸ். முத்து, செல்லப்பாண்டி, இருளாண்டி, அழகு, கண்ணன், கென்னடி, முருகவேல், முருகன், ராமமூர்த்தி என இருதரப்பிலும் 16 பேர் மீது வழக்குப்பதிவு செய்து அபிராமம் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.
இதையும் படிங்க: கனிமவளங்கள் கடத்தலைத் தடுக்க அரசு நடவடிக்கை எடுக்கும் - அமைச்சர் துரைமுருகன்