ராமநாதபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் ஆண்கள் அறுவை சிகிச்சைப் பிரிவில் இருந்த நோயாளிகளுக்கு நேற்று மாலை கிருமிவாசினி மருந்தான சிஃபோடாக்சிம் ஊசி செல்லுத்தப்பட்டது. அதன்பின், சிறிது நேரத்தில் நோயாளிகளுக்கு மயக்கம், குளிர்காய்ச்சல், உடல் நடுக்கம் ஏற்பட்டது. இதனால் உறவினர்கள் மருத்துவமனையில் கூச்சலிட்டனர். இதையறிந்த செவிலியர்கள், உடனடியாக மாற்று மருந்து கொடுத்து நோயாளிகளுக்கு முதலுதவி அளித்தனர். இந்த நிகழ்வு மருத்துவமனையில் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதைத்தொடர்ந்து மாவட்ட மருத்துவமனை கண்காணிப்பாளர், மருத்துவர்கள் இணைந்து நோயாளிகளை பரிசோதனை செய்தனர்.
இதுபற்றி தகவலறிந்து மருத்துவமனை விரைந்த மாவட்ட ஆட்சியர் கொ.வீர ராகவ ராவ், சம்பவம் குறித்து நோயாளிகளிடம் கேட்டறிந்தார். அதன்பின், மருத்துவர்கள் பயன்படுத்திய மருந்துப்பொருட்களை ஆய்வுக்கு உட்படுத்த உத்தரவிட்டார்.
பின்னர் இதுகுறித்து செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது,
மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் பயன்படுத்திய மருந்தால் நோயாளிகளுக்கு மயக்கம், குளிர்காய்ச்சல், நடுக்கம் ஏற்பட்டது. நோயாளிகளுக்கு மாற்று மருந்து கொடுத்து அவர்களின் நிலைமையை மருத்துவர்கள் சீராக்கினர். மேலும் பயன்பாட்டிலுள்ள 20 ஆயிரம் புதிய மருந்து குப்பிகள் நிறுத்திவைக்க உத்தரவிட்டுள்ளதாகவும், இது ஊழியர்களின் தவறாக இருக்கும் பட்சத்தில் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் கூறினார்.