ஒருவர் மீது பற்று ஏற்படும் போது அவர்களுக்காக எந்த எல்லைக்கும் சென்று செயல்பட மனித மனம் தயங்குவதில்லை. பரமக்குடியைச் சேர்ந்த பெண் ஸ்டாலின் முதலமைச்சரானால், தன் நாக்கையே அறுத்துக்கொள்வதாக வேண்டுதல் வைத்து அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறார்.
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே உள்ள பொதுவக்குடியைச் சேர்ந்த கார்த்திக் என்பவர் மனைவி வனிதா (32). இவர் திமுக தலைவர் ஸ்டாலின் முதலமைச்சரானால் தன் நாக்கை வெட்டி உண்டியலில் போடுவதாக வேண்டுதல் வைத்துள்ளார். ஸ்டாலின் வெற்றி பெற்று முதலமைச்சராக உள்ள நிலையில், வேண்டுதலை நிறைவேற்ற வனிதா முடிவு செய்துள்ளார்.
இதையடுத்து, சற்றும் தாமதிக்காமல் இன்று காலை பரமக்குடி முத்தாலம்மன் கோயில் வாசல் முன்பாக தனது நாக்கை அறுத்துக்கொண்டு மயங்கி விழுந்தார். தற்போது அவர் சிகிச்சைக்காக பரமக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
திமுக தன்னை பகுத்தறிவு கொள்கைகளால் அடையாளப்படுத்தும் நிலையில், அதன் மீது பற்று கொண்டிருக்கும் தொண்டர்கள் இது போன்ற செயல்களில் ஈடுபடுவது அதிர்ச்சியளிக்கிறது. திமுக தன் கொள்கைகளை கொண்டு சேர்க்க வேண்டிய தூரம் இன்னும் இருக்கிறது. மூடநம்பிக்கைகள் இதுபோல் நம்மை முட்டாள்தனத்தின் உச்சத்துக்கு கொண்டு செல்கிறது.
தமிழ்நாட்டில் நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் நேற்று வெளியாகின. இதில் திமுக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க உள்ளது. 234 தொகுதிகளில் போட்டியிட்ட அக்கட்சி, கூட்டணியுடன் சேர்த்து மொத்தமாக 159 இடங்களை கைப்பற்றியது. அதிமுக தலைமையிலான கூட்டணி 75 இடங்களை கைப்பற்றியது.
இதையும் படிங்க:'கரோனா பேரிடரை ஸ்டாலின் ஒழிப்பார்' - பாலகிருஷ்ணன்