ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூர் அருகே காரில் கஞ்சா கடத்தி வருவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதனடிப்படையில், முதுகுளத்தூர் டிஎஸ்பி ராகவேந்திர ரவி தலைமையிலான காவலர்கள் செல்வனாயகபுரம் விலக்கு சாலையில் ரோந்துப் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.
அப்போது, அவ்வழியாக வந்த காரை காவல் துறையினர் தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அதில், 25 கிலோ கஞ்சா, இரண்டு ஈட்டி, மூன்று வாள் இருந்தது தெரியவந்தது.
பின்னர் அவர்களிடமிருந்து மூன்று கார்கள், ஒரு இரு சக்கர வாகனமும் பறிமுதல் செய்யப்பட்டு, காரிலிருந்த கீழத்தூவலைச் சேர்ந்த காளீஸ்வரன், வீரசோழன் பகுதியைச் சேர்ந்த செல்வராஜ், அருண்கார்த்திக், சுதாகர் ஆகியோரை காவல் துறையினர் கைது செய்து விசாரணை நடத்தினர்.
அதில், தரைக்குடியைச் சேர்ந்த யோகலெட்சுமணன், அம்மன்ப்பட்டியைச் சேர்ந்த அஜீத், முருகன் பரமக்குடியைச் சேர்ந்த காளிமுத்து ஆகிய நான்கு பேரும் இந்த கடத்தலில் ஈடுபட்டுள்ளதால் அவர்களை காவல் துறையினர் தேடி வருகின்றனர். இவர்கள் மீது ஏற்கனவே கொலை, கஞ்சா கடத்தல் உள்ளிட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளது.
இந்நிலையில், கைது செய்யப்பட்ட நான்கு பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இதைத் தொடர்ந்து, சிறப்பாக செயல்பட்ட காவல்துறையினருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திக் பாராட்டு தெரிவித்தார்.
மேலும் பொதுமக்கள் தங்களது பகுதியில் நடைபெறும் சட்டவிரோதமான செயல்கள், மணல் கடத்தல், போதைப்பொருள்கள் விற்பனை, சூதாட்டம், லாட்டரி விற்பனை, பிற ரகசிய தகவல்கள், குறைபாடுகள், வேறு ஏதேனும் புகார்கள் இருப்பின் மாவட்ட காவல் கண்காணிப்பாளரை 8778247265, 8778247265, 8778247265 என்ற எண்ணில் நேரடியாக தொடர்பு கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: ஆந்திராவில் 120 கிலோ கஞ்சா கடத்திய நான்கு பேர் கைது