புதுக்கோட்டை: தமிழகத்தின் ஒளியாண்டு என்று கடந்த 1908ஆம் ஆண்டை கூறுவார்கள். ஏனென்றால் மின்சார விளக்குகள் தமிழகத்தில் ஒளிர்ந்த ஆண்டு இது. முதல் மின்சார உற்பத்தி குன்னூர் அருகே காட்டேரி அருவியிலிருந்து தயாரிக்கப்பட்டது. குன்னூர் தேயிலைத் தொழிற்பேட்டை என்பதால் தேயிலையை அரைத்து தூளாக்கி வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய இந்த மின்சாரம் பெரிதும் பயன்பட்டது.
பிரிட்டிஷ் ஆட்சியின் தென்னிந்தியத் தலைநகராகத் திகழ்ந்த சென்னை பட்டணத்துக்கே மின்சாரம் வந்தது இதன் பின்னர் தான். கடந்த 1927ஆம் ஆண்டு அப்போதைய ஆங்கிலேய அரசால் மின்சாரத் துறை உருவாக்கப்பட்டது. இந்த துறையின் கீழ் பைக்காரா நீர்மின் நிலையம் தொடங்கப்பட்டு பிரிட்டிஷ் பொறியாளர் சர்.ஜான், ஜி.ஹென்றி ஹாவர்ட் சென்னை மாநில மின்சாரத் துறையின் முதல் தலைமை பொறியாளராக நியமிக்கப்பட்டார்.
இந்திய விடுதலைக்குப் பின்னர், கடந்த 1948ஆம் ஆண்டு மெட்ராஸ் மாநில மின்சார வாரியம் உருவாக்கப்பட்டது. இந்த வாரியத்தின் தலைமை பொறியாளர் பத்மஸ்ரீ வி.பி.அப்பாத்துரையால் அப்போதைய புதுக்கோட்டைச் சமஸ்தானத்துக்கு உட்பட்ட திருமயம் அருகே உள்ள கடியாபட்டி ராமச்சந்திரபுரத்தில் மின் உற்பத்தி நிலையம் தொடங்கப்பட்டு மின்சாரம் தயாரிக்கப்பட்டது. இந்த தகவல் இந்த நிலையத்தின் ஆவணப் பதிவிலிருந்து தெரிய வருகிறது.
கடந்த 1908ஆம் ஆண்டு மின்நிலையம் தொடங்கி மின்சார உற்பத்திக்கு வித்திட்டவர் ராமச்சந்திரபுரம் டி.எஸ்.சொக்கலிங்க செட்டியார். ஸ்ரீ பிரமவித்யாம்பாள் எலக்ட்ரிக் சப்ளை கார்ப்பரேசன் லிமிடெட் எனும் நிறுவனம் 800 பங்குகளைக் கொண்டு ஒரு பங்கு ரூ.500 வீதம் இந்த நிலையத்தை நிறுவினார்.
புதுக்கோட்டைச் சமஸ்தான காலத்தில் நிறுவப்பட்ட இந்த நிறுவனத்துக்கு டர்பன் எனும் விசையாழி ஜெர்மனி நாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டது. முதலில் தனிநபருக்காகத் தொடங்கப்பட்ட இந்த மின்சார நிலையம் பின்னர் விரிவடைந்து பொதுத்துறை நிறுவனமாக மாற்றப்பட்டது. கடியாபட்டிக்கு பின்னர் ராயவரம், அரிமளம் ஊர்களுக்கு மின்சாரம் வழங்கப்பட்டது.
கடந்த 1916ஆம் ஆண்டு அரிமளத்துக்கு மின்சாரம் கிடைத்தது. ஆண்டுதோறும் இந்த நிறுவனத்தின் உரிமையைப் புதுப்பிக்க வேண்டியிருந்தது. கடந்த ஜூன் 30, 1935 அன்று புதுப்பித்த உரிமைப் பத்திரத்தில், நிறுவனத்தின் இயக்குநராக அரிமளம் முருகப்பா செட்டியார் இருந்துள்ளார் என்றும், இந்த நிலையம் தொடங்கப்பட்ட ஆண்டு கடந்த 1908 என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
புதுக்கோட்டை நகரம் மின்சாரத்தால் ஒளிர்ந்த ஆண்டு கடந்த 1928ஆம் ஆண்டு என ஆவணங்கள் குறிப்பிடுகின்றன. ஆனால், ராமச்சந்திரபுரம் எனும் கடியாபட்டியில் மின் விளக்குகள் ஒளிர்ந்தது கடந்த 1908 ஆம் ஆண்டு. புதுக்கோட்டை மன்னரின் அரண்மனை, அதன் தலைமையிடம் மின்விளக்குகளால் ஒளிர்வதற்கு முன்பே கடியாபட்டி ராமச்சந்திரபுரம் கிராமம் மின்சார வசதி பெற்றது.
அன்றைய காலத்தில் ஊன்றப்பட்ட இரும்பு மின்கம்பங்கள் இதற்குச் சாட்சியாக இன்றும் நின்றுகொண்டிருக்கிறது. ராமச்சந்திரபுரம் தான் இன்று கடியாபட்டி என்று அழைக்கப்படுகிறது. நாட்டுக்கோட்டைச் செட்டியார்கள் வாழ்ந்த இந்த ஊரில் தயாரிக்கப்பட்ட மின்சாரம் ராயவரம், அரிமளம், திருமயம் பகுதிக்கு இந்த மின்கம்பங்கள் வழியாகக் கொண்டு செல்லப்பட்டிருக்கிறது.
இந்த மின்சாரத்தைத் தயாரித்துக் கொடுத்த பிரமவித்யாம்பாள் எலக்ட்ரிக் சப்ளை கார்ப்பரேசன் லிமிடெட் எனும் நிலையத்தின் கட்டுமானம் இப்போது புதர்கள் மண்டி கூடாரமாகக் காட்சியளிக்கிறது. இதுவும் ஒரு வகையில் நினைவுச் சின்னம் தான். இந்த சின்னத்தைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க:குடியாத்தத்தில் குலதெய்வ பூஜை ஏற்பாட்டில் மின்சாரம் தாக்கி 2 பேர் உயிரிழப்பு!