புதுக்கோட்டை: கடந்த 2019 ஆம் ஆண்டு கொரோனா காலகட்டத்தில் தருமபுரி மாவட்டத்தில் பிளீச்சிங் பவுடர் வாங்கியதில் நடந்த முறைகேடானது அரங்கேறியுள்ளது. தற்போது அதற்காக பாப்பிரெட்டிப்பட்டியில் வட்டார வளர்ச்சி அலுவலர் கிருஷ்ணன் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் அந்த பணியை ஒப்பந்தம் எடுத்திருந்த புதுக்கோட்டை வெட்டன்விடுதி பகுதியைச் சேர்ந்த அதிமுக பிரமுகர் மற்றும் அரசு ஒப்பந்தக்காரர் பழனிவேல். கடுக்காக்காட்டில் உள்ள இவரது வீடு, அலுவலகம் மற்றும் உறவினர் எனச் சம்பந்தப்பட்ட இடங்களில் திருச்சி லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி தலைமையிலான 15 போலீசார் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும் புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த தற்போதைய பாஜக பிரமுகரான முருகானந்தம் வீட்டில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பாக முன்னாள் அமைச்சர் வேலுமணி இருந்தபோது தமிழ்நாடு முழுவதும் எல்இடி பல்புகள் விநியோகம் செய்ய ஒப்பந்தம் எடுத்து விநியோகம் செய்திருந்த நிலையில், அப்போது முருகானந்தத்தின் சகோதரரான அதிமுகவைச் சேர்ந்த அரசு ஒப்பந்தக்காரர் பழனிவேலுக்கு சொந்தமான புதுக்கோட்டை சார்லஸ் நகரில் உள்ள வீட்டிலும் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை மேற்கொண்டனர்.
தற்பொழுது மீண்டும் கரோனா காலகட்டத்தில் பிளீச்சிங் பவுடர், ஸ்டேஷனரி பொருட்களும் ஒப்பந்தம் எடுத்து விநியோகம் செய்துள்ளார். அதிலும், முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாகப் புகார் எழுந்ததைத் தொடர்ந்து புதுக்கோட்டை மாவட்டத்தில் கருக்காக்காடு பகுதிகளில் உள்ள பழனிவேல் வீடு மற்றும் அவரது உறவினர்கள் வீடுகள் என 4 இடங்களில் திருச்சி லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
இதனைத் தொடர்ந்து இந்த வழக்கு தொடர்பாக மற்றொரு அரசு ஒப்பந்ததாரரான தாகிர் உசேனின் புதுக்கோட்டை, பொன் நகர் பகுதியில் உள்ள இல்லத்திலும் தற்பொழுது திருச்சி லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இவர் கரோனா காலங்களில் கிருமி நாசினி ஒப்பந்தம் எடுத்து, விநியோகம் செய்ததில் முறைகேடு நடந்ததாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில் இந்த அதிரடி சோதனை நடைபெற்று வருகிறது.