சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு புதுக்கோட்டை பேருந்து நிலையம் அருகில் மாணவா் சங்கத்தின் மாநில அளவிலான மாணவிகள் இருநாள் மாநாடு நடைபெற்றது.
பிரதிநிதிகள் மாநாட்டுக்கு மாநிலத் தலைவா் ஏ.டி. கண்ணன் தலைமை வகித்தாா். மாணவிகள் ஒருங்கிணைப்பாளா் சத்யா சங்கக் கொடியை ஏற்றினாா். துணை ஒருங்கிணைப்பாளா் சரண்யா தீா்மானம் வாசித்தாா். மாநிலக்குழு உறுப்பினா் ஓவியா வரவேற்றாா். மாநாட்டைத் தொடங்கி வைத்து தஞ்சை குந்தவை நாச்சியாா் கல்லூரி தமிழ்த் துறைத் தலைவா் இரா.திராவிடராணி உரையாற்றினாா். இந்திய மாணவா் சங்கத்தின் அகில இந்திய துணைத் தலைவா் தீப்சிதா இந்த மாநாட்டுக்கு சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றிருந்தார்.
இந்த மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் :-
- மக்கள் தொகையில் சரிபாதியாக உள்ள பெண்களுக்கு அனைத்துத் துறைகளிலும் 50 விழுக்காடு இடஒதுக்கீடு வழங்க வேண்டும். 50 விழுக்காடு இடஒதுக்கீட்டை உடனடியாக வழங்க முடியாத சூழலில், குறைந்தபட்சம் சட்டமன்ற, நாடாளுமன்றங்களில் 33 விழுக்காடு இட ஒதுக்கீட்டை உடனடியாக அமுல்படுத்த வேண்டும்.
- கோவை பொள்ளாச்சியில் 200க்கும் மேற்பட்ட மாணவிகளை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கி அதை வீடியோ எழுத்து பணம்கேட்டு மிரட்டப்பட்ட கொடூர சம்பவத்தின் குற்றவாளிகள் நீதிமன்ற விசாரணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். இத்தகைய கொடூர சம்பவம் கள்ளக்குறிச்சியிலும் நடந்துள்ளது. இத்தகைய குற்றவாளிகள் மீது பிணையில் வெளிவரமுடியாத பிரிவுகளில் கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- காதல் திருமணங்கள் செய்பவர்களை கூலிப்படைகளை ஏவி கொலைசெய்யும் நிலை தொடர்கிறது.
- சாதி ஆணவக்கொலைக்கு எதிராக சிறப்புச் சட்டம் இயற்றி, சாதி மறுப்புத் திருமணம் செய்துகொள்பவர்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும்.
- பள்ளி வளாகங்களில் மாணவிகளுக்கு போதுமான அளவுக்கு இலவசமாக நாப்கின்களை வழங்குவதோடு, நாப்கின் எரியூட்டும் இயந்திரத்தை அமைத்து மாணவிகளை மன உளைச்சலில் இருந்து பாதுகாக்க வேண்டும்.
- பெண்கள் வாழத் தகுதியில்லாத நாடுகளில் இந்தியா முதலிடத்தில் உள்ளது. கல்வி வளாகங்களில் பாலியல் சீண்டல்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. பள்ளி வளாகங்களில் பாலியல் துன்புறுத்தலைத் தடுத்திட வர்மா கமிட்டி அறிவித்துள்ள பரிந்துரைகளை உடனடியாக அமுல்படுத்த வேண்டும்.
- மூன்றாம் பாலினமாக உள்ள திருநங்கையருக்கு மற்றவர்களுக்கு உள்ள அனைத்து உரிமைகளையும் சலுகைகளையும் வழங்குவதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இந்த மாநாட்டில் 300க்கும் மேற்பட்ட இந்திய மாணவர் சங்கத்தினர் இளையோர் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க : சர்வதேச பெண்கள் தின விழா: விழிப்புணர்வு பேரணி