புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி பகுதியை சேர்ந்த 33 வயது மதிப்புத்தக்க பெண் ஒருவர் தனது கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக எட்டு ஆண்டுகளாக பிரிந்து 14 வயது மகள், 13 வயது மகனுடன் வாழ்ந்து வருகிறார்.
தங்களது வாழ்வாதரத்திற்காக அப்பெண் கட்டடக்கூலி வேலைக்கு சென்றார். அப்போது அங்கு அந்த பெண்ணுக்கு கொத்தனாராக வேலைப்பார்த்த பார்த்திபன் (34) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு அவரைய் இரண்டாவது திருமணம் செய்துகொண்டார்.
இந்த நிலையில், சமீபகாலமாக தனது மகளின் வயிறு வீக்கம் அடைந்திருப்பதை கண்ட அப்பெண் சந்தேகம் அடைந்து சிறுமியிடம் விசாரித்துள்ளார். அப்போது பார்த்திபன் கடந்த ஏழு மாதங்களாக பாலியல் வன்புணர்வு செய்ததாக சிறுமி தெரிவித்தார்.

உடனே அச்சிறுமியை அழைத்துக்கொண்டு தாய் அறந்தாங்கி அரசு மருத்துவமனைக்கு சென்றார். அங்கு சிறுமியை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் மூன்று மாதம் கர்பமாக இருப்பதாக தெரிவித்தனர். இதில் அதிர்ச்சியடைந்த தாய் உடனே இதுகுறித்து அறந்தாங்கி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
சிறுமியின் தாய் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், பார்த்திபனை அழைத்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். இறுதியில் பார்த்திபன் தான் செய்த குற்றத்தை ஒப்புக்கொண்டார். இதனைத் தொடர்ந்து பார்த்திபனை காவல் துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க: சிறுமிகளின் ஆபாச வீடியோக்கள் பதிவேற்றம் - இருவர் கைது