புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு. இவர் தனது திறமை, கண்டிப்பு, நிர்வாகம், ஈகை குணம் இவற்றில் தன்னுடைய செயல்பாடுகளால் மக்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்று, சமூக வலைதளங்களில் இவருடைய பெயர் அவ்வப்போது பிரபலமாகிவிடும்.
தனக்கு கீழ் பணி புரியும் பணியாளர்களிடம் எந்த அளவிற்கு கண்டிப்புடன் செயல்பட்டு வேலை வாங்கி வருகிறாரோ அந்த அளவிற்கு அவர்கள் மீது அன்பும், பாசமும், மரியாதையும் வைத்திருப்பார் ஆட்சியர் கவிதா ராமு. அதற்கு எடுத்துக்காட்டாய் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் டபேதாரராக பணியாற்றி வந்தவருக்கு ஓய்வு பெறும் நாளில் இன்ப அதிர்ச்சி கொடுத்து, தன்னுடைய ஈகை குணத்தை மீண்டும் நிலை நிறுத்தியுள்ளார்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் பொறுப்பேற்கும் ஆட்சியர்களுக்கு டபேதாரராக அன்பழகன் என்பவர் கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றி வந்தார். தற்போதைய புதுக்கோட்டை ஆட்சியர் கவிதா ராமுவிற்கும் அன்பழகன் கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாக டபேதாராக பணியாற்றி வந்த நிலையில் கடந்த 29ஆம் தேதி அவர் பணி ஓய்வு பெற்றார்.
இதனைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு தலைமையில் அவரது இல்லத்தில் அன்பழகனுக்கு பிரிவு உபசரிப்பு நிகழ்வுகள் வெகு விமர்சியாக நடந்துள்ளது. அதன்பின் அன்பழகனை தனது காரில் முன் சீட்டில் அமர வைத்து மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு நெகிழ்வோடு வீட்டுக்கு அனுப்பி வைத்த வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.