தமிழ்நாட்டில் நாடாளுமன்றத் தேர்தல், 18 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் ஏப்ரல் 18ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதனைமுன்னிட்டு, வாக்காளர்களுக்கு பணம் விநியோகிப்பதைத் தடுப்பதற்காக தேர்தல் பறக்கும் படையினர், காவல் துறையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டுவருகின்றனர்.
புதுக்கோட்டை மாவட்டம் திருச்சி செல்லும் புறவழிச்சாலையில் சிப்காட் அருகில் நேற்றிரவு 1.30 மணயளவில் காவல் துறையினர் சாலையில் சென்றுகொண்டிருந்த பாதசாரிகளிடம் சோதனை மேற்கொண்டனர். அதில் கோயில் அர்ச்சகர் ஒருவரிடம் சோதனை செய்யும்போது, பூஜை பொருள்களுடன் ஒன்றரை லட்சம் பணம் இருப்பது தெரியவந்தது.
பணத்திற்கு உரிய ஆவணங்கள் இல்லாததால், அந்த நபரிடம் விசாரணை மேற்கொண்டனர். அதில் அந்த நபர் ராமேஸ்வரத்தைச் சேர்ந்தவர் என்பதும், அவர் பெயர் அனந்தராமன் என்பதும் தெரியவந்தது.
மேலும்,பூஜைக்காக பொருள்கள் வாங்கியதையடுத்து, மீதி பணம்தான் அது எனவும் அந்த அர்ச்சகர்தெரிவித்துள்ளார். இதையடுத்து உரிய ஆவணங்கள் இல்லாததால் அந்தப் பணத்தை காவல் துறையினர் பறிமுதல் செய்தனர்.
மேலும், அந்தப் பணத்திற்கான சரியானஆவணத்தைகாண்பித்தால் மட்டுமே திருப்பித்தர முடியும் என்று கூறி புதுக்கோட்டை திருக்கோகர்ணம் காவல் நிலையத்திற்கு அதனை எடுத்துச் சென்றனர்.