சென்னை : சென்னை வடபழனி பிரசாத் லேபில் 'நெஞ்சு பொறுக்குதில்லையே' என்ற திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. இவ்விழாவில் விசிக தலைவர் திருமாவளவன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
விசிக தலைவர் திருமாவளவன் மேடையில் பேசும்போது, "தமிழ் திரைப்படத்தில் மட்டுமல்ல, உலகம் முழுவதும் திரைப்படங்கள் காதலை மையப்படுத்தி பல்லாயிரக்கணக்கான திரைப்படங்கள் படைக்கப்பட்டிருக்கின்றன. இன்னும் இது கருப் பொருளாகவே இயங்கிக் கொண்டே இருக்கிறது. இன்னும் பல ஆயிரம் படங்கள் வந்து கொண்டே இருக்கும். அவ்வளவு பெரிய ரிசோர்ஸ் லவ் என்பது.
அதை ஒவ்வொரு கோணத்தில் ஒவ்வொருவரும் பார்க்க முடியும். காலத்திற்கேற்ப அதை வெவ்வேறு கோணங்களில் நாம் பார்க்க முடியும். மக்களிடத்தில் இதை காட்ட முடியும். இவர்கள் அந்த காதலை வணிக பொருளாக பார்க்காமல் சமூக மாற்றத்திற்கு பயன்படுத்தக்கூடிய ஒரு கருவியாக, ஒரு உந்து சக்தியாக பயன்படுத்த வேண்டும்.
இதையும் படிங்க : 'வந்தேறி என்கிறார்'.. கோவை வடக்கு மாவட்ட நாதக நிர்வாகிகள் கூட்டாக வெளியேறினர்.. பரபரப்பு பேட்டி..!
மேலும், சமூகத்தில் இருக்கிற எதார்த்த நிலைதான் அதை எப்படி முற்போக்கு பார்வையோடு பொருத்தி மக்களிடத்திலே வெளிப்படுத்தி காட்டுவது என்ற அந்த முயற்சியில் ஈடுபட்டு இருக்கிறார்கள். காதல் மனிதன் தோன்றிய காலத்தில் இருந்து இருக்கிறது. மனித குலத்துக்கு மட்டுமல்ல எல்லா உயிரினங்களிடமும் இருக்கிற ஒரு உணர்வு. அது ஒரு மோஷன். அது ஒரு இயல்பான பண்பு. வலிந்து யாராலும் உருவாக்க முடியாது. காய் எப்படி கணிக்கிறது? அது ஒரு இயல்பான பண்பு. அதுதான் இயங்கியல். அதைப்போல காதல் என்பதும் ஒரு இயங்கியல் பண்பு.
இன்றைக்கு இயக்குநர்கள் சோஷியல் மேசேஜ் என்ற அடிப்படையில், காதலுக்கு பிறகு, திருமணத்திற்கு பிறகு அவர்கள் எதிர் கொள்ளக்கூடிய ஒரு சமூகப் பிரச்சனையை மையப்படுத்தி எல்லோரும் ஏற்கனவே பேசி இருக்கிறார்கள் என்றாலும் கூட, ஆணவக் கொலைகள் குறித்து நாங்கள் ஒரு புதிய கோணத்தில் இதை மக்களுக்கு சொல்ல விரும்புகிறோம். அதுதான் இந்த படம் என்று குறிப்பிட்டு இருக்கிறார்கள்.
ஹானர் கில்லிங் (Honor Killing) என்பது கௌரவம் என்று தமிழ் படுத்துகிறோம். அதனால் கௌரவ கொலைகள் என்று நீண்ட காலம் சொல்லப்பட்டு வந்தது. இதில், என்ன கௌரவம் இருக்கிறது? நான் முதன்முதலில் இதைப் பற்றி எழுதுகிற போது இதை வரட்டு கௌரவ கொலைகள் என்று எழுதினேன்.
பெற்ற பிள்ளையை கூட கொடூரமாக படுகொலை செய்யக்கூடிய அளவுக்கு உந்தி தள்ளுகிறது. அந்த கௌரவம் எப்படி சரியான கௌரவமாக இருக்க முடியும்? இது ஒரு வரட்டு கெளரவம். வரட்டு கௌரவத்திற்காக பெற்ற பிள்ளைகளை கூட படுகொலை செய்கிறார்களே என்கிற ஒரு வலி நமக்கு இருக்கிறது. அதை ஆணவக் கொலை என்று இப்போது அழைக்கிறோம். விசிக பொதுச் செயலாளர் ரவிக்குமார் இந்த சொல்லாடலை முதலில் பயன்படுத்தினார். இன்று எல்லோரும் நாம் பயன்படுத்துகிறோம்.
சிசுக்கொலை, ஆவணக் கொலை நம் சமூகத்தின் களங்கம். இது போன்ற மூடநம்பிக்கைகள் எந்த அளவுக்கு இங்கே மலிந்து கிடக்கிறது என்பதற்கு இந்த இரண்டும் சான்று. ஹானர் கில்லிங் என்கிற ஆணவக் கொலையும், சிசுக் கொலையும் என்னுடைய அனுபவத்திலிருந்து சொல்லுகிறேன் இந்தியாவில்தான் அதிகம்.நம்முடைய தேசத்தில் தான் இவை இரண்டும் மிக அதிகமாக இன்றும் சாட்சியங்களாக இருக்கின்றன. இப்போ இந்த இரண்டையும் நாம் அழித்தொழிக்க வேண்டும், துடைத்தெறிய வேண்டும் என்ற ஒரு விழிப்புணர்வு நமக்கு தேவை,"என்றார்.
ஈடிவி பாரத் வாட்ஸ்அப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்