நீலகிரி: நீலகிரி மாவட்டம் குன்னூரில் கடுமையான குளிரின் தாக்கத்தால் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி, உதகை, குன்னூர் உள்ளிட்ட பகுதியில் கடந்த 10 நாட்களுக்கு மேலாக பலத்த மழை பெய்து வந்தது. தற்போது நான்கு நாட்களாக மழையின் தாக்கம் குறைந்து பகலில் வெயில் தாக்கம் அதிகரித்துள்ளது. மேலும் மாலை நேரங்களில் கடுமையான மூடுபனி நிலவி வருகிறது. மாலை நேரங்களிலும் அதிகாலை நேரங்களிலும் கடுமையான நீர்ப்பனி நிலவி வருகிறது. இதனால் சாலைகளில் நிறுத்தப்படும் வாகனங்கள் மீதும், புல் தரைகளிலும், அதிகாலை நேரங்களில் நீர் பனிகள் விழுவது வழக்கமாக உள்ளது.
இவ்வாறு கடுமையான குளிரின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் குன்னூர் பேருந்து நிலையப் பகுதியிலிருந்து மேல் குன்னூர் இன்கோ சார்வ் செல்லக்கூடிய சாலையில் உபயோகப் படுத்தாமல் இருந்த கட்டிடத்தில் ஒருவர் இறந்து கிடப்பதாக குன்னூர் காவல்துறையினருக்கு தகவல் வந்தது.
இதையும் படிங்க: யானைகளை காக்கும் ஏ.ஐ. கேமராக்கள்... தமிழக வனத்துறையின் புதிய முயற்சியால் ரயில் விபத்தில் விலங்குகள் உயிரிழப்புக்கு முற்றுப்புள்ளி!
இந்த தகவலின் பேரில் குன்னூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டனர். மேலும் போலீசார் உயிரிழந்த சேகரின் உடலை கைப்பற்றி குன்னூர் அரசு மருத்துவமனையில் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அந்த விசாரணையில் இறந்தவர் பெயர் சேகர் என்றும், அவர் கடும் குளிர் காரணமாக இறந்ததாக தெரிய வருகிறது.
இறந்தவர் சம்பவ இடத்தில் பல நாட்களாக படுத்து உறங்கி வந்ததாகவும், குளிரை தாங்க முடியாமல் அதே இடத்தில் உயிரிழந்துள்ளதாகவும் விசாரனையில் தெரிய வந்துள்ளது. நீலகிரி மாவட்டத்தில் நிலவி வரும் கடும் குளிரின் தாக்கத்தால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டு வரும் நிலையில் ஒருவர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஈடிவி பாரத் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்