சென்னை: தமிழ் சினிமாவில் 2k கிட்ஸ் மத்தியில் பிரபலமான பாடலாசிரியராக வலம் வருபவர் விக்னேஷ் சிவன். இயக்குநரும், நடிகை நயன்தாராவின் கணவருமான விக்னேஷ் சிவன் பல்வேறு நடிகர்களின் படங்களில் பாடல்கள் எழுதியுள்ளார். குறிப்பாக அனிருத் காம்போவில் அதிக ஹிட் பாடல்களை எழுதியுள்ளார்.
சிலம்பரசன் நடிப்பில் இவர் இயக்கிய 'போடா போடி' முதல் தற்போது வரை அனிருத் இசையமைத்துள்ள பல படங்களில் பாடல்கள் எழுதியுள்ளார். ஆனால் விக்னேஷ் சிவன் எழுத்தில் அனிருத் இசையமைப்பில் ’நானும் ரௌடி தான்’ படம் மூலம் ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்றார்.
மனித உணர்ச்சிகளை இந்த தலைமுறை ரசிகர்களை கவரும் வகையில் எழுதியதில் இவரது பாடல்கள் மாபெரும் வெற்றி பெற்றது. விக்னேஷ் சிவன் கருப்பு வெள்ளை, அதாரு அதாரு என மாஸ் பாடல்கள் எழுதியிருந்தாலும், அவரது காதல் பாடல்களுக்கு ரசிகர்கள் மனதில் தனியிடம் உண்டு. அவ்வாறு விக்னேஷ் சிவன் எழுதிய காதல் பாடல்கள் பற்றி இப்போது பார்க்கலாம்.
’சிரிக்காதே’ (ரெமோ): பாக்யராஜ் கண்னன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், கீர்த்தி சுரேஷ் நடிப்பில் அனிருத் இசையமைத்த திரைப்படம் 'ரெமோ'. இத்திரைப்படத்தில் சிவகார்த்திகேயன், கீர்த்தி சுரேஷ் கெமிஸ்ட்ரி இளைஞர்கள் மனதை கவர்ந்தது. அதற்கு முக்கிய காரணமாக அனிருத் இசையமைத்த பாடல்கள் மற்றும் விக்னேஷ் சிவன் பாடல் வரிகள். குறிப்பாக ’சிரிக்காதே’ பாடல் வரிகள் எளிதான தமிழ் வார்த்தைகளுடன் 2கே கிட்ஸ் ரசிகர்களை கவரும் வகையில் இருந்தது.
’தங்கமே’ (நானும் ரௌடி தான்): விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, நயன்தாரா நடித்த திரைப்படம் 'நானும் ரௌடி தான்'. அனிருத் இசையமைப்பில் இந்த படத்தில் அனைத்து பாடல்களையும் விக்னேஷ் சிவனே எழுதியிருந்தார். அதில் வெளியான உடனே ஹிட்டடித்தது 'தங்கமே' பாடல். இதில் டம்மி ரௌடி கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி நடித்திருந்தார்.
அந்த கதாபாத்திரத்திற்கு ஏற்றது போலவும் மற்றும் காதலியின் அழகை வர்ணிப்பது போலவும் ’தங்கமே’ பாடல் அமைந்திருக்கும். மேலும் ‘ராசாத்திய ராத்திரி பாத்தேன், ரௌடி பைய ரொமான்டிக் ஆனேன்’ ஆகிய வரிகள் இளைஞர்களை கேட்டவுடன் முணுமுணுக்க வைத்தது.
‘கண்ணான கண்ணே’ (நானும் ரௌடி தான்): ’நானும் ரௌடி தான்’ படப்பிடிப்பு சமயத்தில் விக்னேஷ் சிவன், நயன்தாரா இருவரும் காதலித்து வந்தனர். அவர் இந்த படத்தில் எழுதிய 'கண்ணான கண்ணே' பாடல் மிகவும் ஸ்பெஷலாக அமைந்தது. காரணம் விக்னேஷ் சிவன், நயன்தாரா மீதுள்ள காதலுக்கு அர்ப்பணிக்கும் வகையில் இந்த பாடலை எழுதியிருந்தார். இந்த பாடல் காதல் ஜோடிகள் தங்கள் எதிர்கொள்ளும் கடினமான காலகட்டங்களில் ஒருவருக்கு ஒருவர் ஆறுதல் சொல்வது போல அமைந்திருக்கும். இப்பாடல்கள் இன்று வரை பல காதலர்கள் பிளே லிஸ்டில் பிடித்தமான பாடலாக இடம்பெற்றுள்ளது.
’நான் பிழை’ (காத்துவாக்குல ரெண்டு காதல்): விஜய் சேதுபதி, நயன்தாரா, சமந்தா நடிப்பில் வெளியான ’காத்துவாக்குல ரெண்டு காதல்’ படத்தில் விக்னேஷ் சிவன் எழுதிய பாடல் ‘நான் பிழை’. இப்பாடல் நயன்தாராவிற்கு மிகவும் பிடித்தமானது என விக்னேஷ் சிவன் கூறியுள்ளார். அனிருத் இசையில் சூப்பர் ஹிட் மெலடி பாடலாக இது அமைந்தது.
இதையும் படிங்க: "என்ன ஒரு அடி அடிச்சதுக்கே 5 வருசமா கதறிகிட்டு இருக்கீங்க”... எஸ்.ஆர்.பிரபு, விஜய் ரசிகர்கள் இடையே வாக்குவாதம்!
’தீமா’ (லவ் இன்சூரன்ஸ் கம்பெனி): அனிருத், விக்னேஷ் சிவன் கூட்டணியில் சமீபத்தில் வெளியான மற்றொரு மெலடி பாடலாக வெளியானது ’தீமா’. இப்பாடல் சற்று வித்தியாசமாக மேற்கத்திய இசையில் அமைக்கப்பட்டிருந்தது. இந்த பாடலில் ‘இருதய கூட்டை இடித்தவளே என் பெற்றோர்க்கு செல்ல மருமகளே’ ஆகிய வரிகள் எளிமையானதாகவும், இளைஞர்களை கவரும் வகையிலும் அமைந்தது.
ஈடிவி பாரத் வாட்ஸ்அப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்