மக்களவைத் தேர்தல் தமிழ்நாட்டில் வரும் 18ஆம் தேதி நடக்கிறது. அனைத்து கட்சிகளின் பரப்புரை தீவிரமாக நடைபெற்று வருகிறது. அரசியல் தலைவர்கள் யார் வந்தாலும் மிக ஆர்வமாக கூட்டம் கூட்டமாக சென்று அவர்களின் உரையை கேட்ட காலம் இருந்தது. ஆனால் தற்போது இருக்கும் நிலவரப்படி தேர்தலா.. என்று தலை தெறிக்க ஓடுபவர்களே அதிகமாகி வருகின்றனர். அதற்கு காரணம், அண்ணா, காமராஜர், கருணாநிதி, எம்ஜிஆர், கக்கன் போன்ற தலைவர்கள், தற்போது இல்லை என்பதே ஆகும் என பலர் கூறுகின்றனர்.
அன்று எம்ஜிஆர் அரசியலுக்கு வராமல் இருந்திருந்தால் சினிமாவில் முழுவதும் நேரத்தைக் கழித்து இருப்பார். காமராஜர் அரசியலுக்கு வராமல் இருந்திருந்தால் ஒரு சிறந்த விவசாயியாக மாறியிருப்பார். மகாத்மா காந்தி நாட்டிற்காக போராடாமல் இருந்திருந்தால் மிகச் சிறந்த வழக்கறிஞராக ஆகியிருப்பார். ஜவர்கலால் நேரு அரசியலுக்கு வராமல் இருந்திருந்தால் ஒரு சிறந்த ஆசிரியராகவே பணியை தொடர்ந்து இருப்பார். அறிஞர் அண்ணா அரசியலுக்கு வராமல் இருந்திருந்தால் ஒரு சிறந்த ஆங்கில ஆசிரியராக ஆகியிருப்பார்.
தந்தை பெரியார் திராவிடர் கழகம் தொடங்காமல் இருந்திருந்தால் மக்கள் பகுத்தறிவு என்பது என்னவென்றே தெரியாமல் போய் இருப்பார்கள். அவர்களெல்லாம் மக்களுக்கு நன்மை செய்யாமல் இருந்திருந்தால் அவர்களை இன்று வரலாறு பேசாது. ஆகவேதான் மக்கள் அரசியல் தலைவர்களை ஆதரித்து தேர்தலையும் ஒரு ஆர்வத்துடன் சந்தித்துவந்தனர்.
ஆனால் தற்போது தேர்தல் பற்றிய கருத்து என்னவென்று கேட்டால் மக்களின் பதில்,"அதெல்லாம் எதுக்கு தேவையே இல்லாம. யாரு ஆட்சிக்கு வந்தாலும் கொள்ளை அடிக்கிறது நடந்துக்கிட்டேதான் இருக்கு"என்ற விரக்தியான பதிலே வருகிறது.
தற்போது இருக்கும் அரசியலின் தாக்கம் மக்களின் மனநிலையை முற்றிலும் மாற்றிவிட்டது என்றுதான் சொல்ல வேண்டும். மக்களிடம் எதிர்பார்ப்புகளையும், ஏமாற்றத்தையும்தான் தற்போது பார்க்க முடிகிறது.
இந்நிலையில், புதுக்கோட்டை மாவட்ட மக்களிடம் தேர்தல் குறித்து கேட்டபோது, முன்பு இருந்த சட்டப்பேரவை உறுப்பினரும், மக்களவை உறுப்பினரும் இதுவரையில் மக்களை வந்து சந்திக்கவே இல்லை. எந்தவித நன்மையும் செய்யவே இல்லை. முன்பிருந்த உறுப்பினர் பெயர்கூட எங்களுக்கு தெரியாது, வாக்கு கேட்க மட்டும் வந்துவிடுகிறார்கள் என்று அடுக்கடுக்காக குற்றம்சாட்டுகின்றனர்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் ஏற்பட்ட கஜா புயலின் தாக்கம் அம்மாவட்ட மக்களிடையே அரசியலின் மீது பெரும் வெறுப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், அவரவர் கோடி கோடியாக சம்பாதித்து சொத்து சேர்ப்பதற்கு நாங்கள் ஏன் வாக்களிக்க வேண்டும் என்று கேள்வி எழுப்புகின்றனர். மேளதாளம், வெடிச்சத்தம் போன்ற ஆரவாரத்தோடு வேட்பாளர்கள் வரவேற்கப்படும் பின்னணியில் மக்களை ஆசை வார்த்தைக் காட்டி அழைத்து வருவதாக ’உச்’ கொட்டுகின்றனர் மக்கள்.
என்னதான் ஓட்டு போட்டாலும் அரசியல்வாதிகள் வந்தாலும் எதுவும் பிரயோஜனம் இல்லை. நாங்கள் சம்பாதித்தால்தான் கஞ்சி குடிக்க முடியும் என்ற நிலைமைக்கு தள்ளப்பட்டுவிட்டதாக கூறுகின்றனர். ஆக மொத்தத்தில் புதுக்கோட்டை மாவட்டத்தை பொறுத்தவரையில் தேர்தல் சூடு பிடிக்கவில்லை, சூடு பிடித்தாலும் அவர்களுக்கு ஆர்வம் இல்லை என்றே கூறலாம்.