கரோனா வைரஸ் காரணமாக அரசு பேருந்து தனியார் பேருந்துகள் அனைத்தும் கடந்த சில மாதங்களாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. இதனால் பலரின் வாழ்வாதாரம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்ட தனியார் பேருந்து ஓட்டுனர் மற்றும் நடத்துநர்களுக்கு கரோனா நிவாரண நிதியாக ஆறு மாதத்திற்கு, மாதம் 15,000 ரூபாய் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தனியார் பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துநர் சங்கம் சார்பில் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு போராட்டம் நடத்தப்போவதாக சிஐடியு அறிவித்திருந்தனர்.
இதையடுத்து கோட்டாட்சியர் அலுவலகத்தில் கோட்டாட்சியர் தண்டாயுதபாணி, தனியார் பேருந்து உரிமையாளர்கள், சங்க நிர்வாகிகள், தனியார் பேருந்து ஓட்டுனர், நடத்துனர்களை அழைத்து சமாதான பேச்சுவார்த்தை நடத்தினார்.
பிறகு பேச்சுவார்த்தையின் முடிவில் ஊரடங்கு உத்தரவால் பாதிப்படைந்த தொழிலாளர்களுக்கு மாதம் 5,000 ரூபாய் வழங்குவதாகக் கோட்டாட்சியர் அறிவித்தார். அதற்குத் தனியார் பேருந்து உரிமையாளர்கள், சங்கத்தில் ஆலோசனைகள் நடத்தி முடிவு எடுப்பதாகக் கூறினர்.