தமிழ்நாட்டில் கரோனா பரவல் நாளுக்கு நாள் வேகமாக அதிகரித்து வருகிறது. கரோனா பரவலின் தொடக்கத்தில் சென்னையில் அதிக அளவில் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை இருந்தது. தற்போது சென்னையில் கரோனா பாதிப்பு குறைந்து வந்தாலும் தமிழ்நாட்டில் மற்ற மாவட்டங்களில் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது.
இந்நிலையில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் நேற்று(ஜூலை 11) புதுக்கோட்டை இராணியார் அரசு மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்டார். பின்னர் மாவட்ட ஆட்சியர் உமாமகேஸ்வரி, மருத்துவர்களுடன் ஆலோசனை நடத்தினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறும்போது, "தமிழ்நாடு முதலமைச்சர் அறிவுறுத்தலின்படி கோவிட் 19 நோயாளிகளுக்கு அதிநவீன உபகரணங்களைக் கொண்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அதேபோன்று உயிர்காக்கக்கூடிய புதிய மருந்துகளையும் தமிழ்நாடு மருத்துவப் பணிகள் கழகத்தின் மூலம் பெறப்பட்டுள்ளது. இதன் மூலம் விரைவில் கரோனா நோயாளிகளை குணப்படுத்த முடியும்.
கிண்டி கிங்ஸ் மருத்துவமனை மிகச் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இம்மருத்துவமனையில் இதுவரை 49 கரோனா நோயாளிகள் அனுமதிக்கப்பட்டு உயர்தர சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் கரோனா பரிசோதனை மையங்கள், ஆக்ஸிஜன் பைப்லைன் அமைக்கும் பணி பொதுப்பணித்துறை மூலம் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குறிப்பாக ஒருவருக்கு 60 லிட்டர் அளவிற்கு ஆக்ஸிஜன் கொடுக்கக்கூடிய புதிய கருவிகள் வரவழைக்கப்பட்டுள்ளது.
இந்தியா முழுவதும் பிளாஸ்மா தெரபி சிகிச்சைக்கு 44 மையங்களுக்கு மத்திய அரசு மூலம் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதில் தமிழ்நாட்டில் உள்ள இராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில்தான் இதுவரை 26 நபர்களுக்கு பிளாஸ்மா தெரபி சிகிச்சை வழங்கப்பட்டுள்ளது. அதில் 24 நபர்கள் முழுவதுமாக குணமடைந்துள்ளனர்.
இந்தியாவிலேயே அதிகமாக பிளாஸ்மா தெரபி சிகிச்சை வழங்கப்பட்டது இம்மையமாகும். இது மிகப்பெரிய சாதனையாகும். இதற்கு தேவையான ரூ.2 கோடி அளவிலான அதிநவீன உபகரணங்கள் வாங்க அரசு ஆணை பிறப்பித்துள்ளது. ஏற்கனவே உயிர்காக்கும் விலை உயர்ந்த மருந்துகள் அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. இதுமட்டுமல்லாமல் இந்திய மருத்துவத் துறையின் சார்பில் யோகா, மூச்சுப்பயிற்சி போன்றவையும் கரோனா நோயாளிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது.
இதேபோன்று சித்தா, ஆயுர்வேத மருத்துவத்திற்கும் முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. புதுக்கோட்டையில் கரோனா நோயாளிகளுக்கு மனநலம் ஆலோசனை, சத்தான உணவு வழங்கப்பட்டு வருகிறது. கரோனாவால் பாதிக்கப்பட்ட பச்சிளம் குழந்தை முதல் வயதான முதியவர்வரை அரசின் சிறப்பான சிகிச்சையால் முழுவதுமாக குணமடைந்து வருகின்றனர். இருப்பினும் பொதுமக்கள் கரோனா வைரஸ் குறித்த விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்" என அவர் அறிவுறுத்தினார்.
இதையும் படிங்க: கரோனாவிலிருந்து மீண்ட காவலர்கள் - ஆதரவற்றோருக்கு உதவி