புதுக்கோட்டை மாவட்டம் குன்னாண்டார்கோவிலில் பாஜகவின் சக்தி கேந்திர பொறுப்பாளர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் பாஜகவின் புதுக்கோட்டை சட்டப்பேரவைத் தொகுதி பொறுப்பாளரான ஹெச்.ராஜா கலந்து கொண்டார்.
இதனைத்தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், '' திமுகவின் பொய்ப் பரப்புரையையும், நாடகங்களையும் பொதுமக்கள் நம்பவில்லை. உண்மையான விவசாயிகள் அனைவரும் வேளாண் சட்டத்தை வரவேற்கின்றனர். அதிமுகவின் உள்விவகாரங்களில் பாஜக தலையிடுவது கிடையாது. முதலமைச்சர் வேட்பாளர் அறிவிப்பதாக அவர்கள் கூறியுள்ளனர். அறிவிக்கட்டும், அவர்களுக்கு முதலமைச்சர் வேட்பாளரை தேர்ந்தெடுப்பதற்கு உரிமை உள்ளது.
பிரதமர் மோடி என்றைக்குமே அதிமுகவை நான் தான் இணைத்தேன் என்று இதுவரை கூறவில்லை. உத்தரபிரதேசத்தில் கலகத்தை ஏற்படுத்துவதற்காக தான் ராகுல்காந்தி அங்கு சென்றார். உத்தரப் பிரதேசத்தில் நடந்து வரும் பாலியல் வன்கொடுமை சம்பவம் மிகவும் கண்டிக்கத்தக்கது. இருப்பினும் மாநில அரசு சார்பாக 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நான் தேசியச் செயலாளராக 6 ஆண்டுகள் பதவியில் இருந்துள்ளேன். வேறு பதவி கொடுப்பதற்காக நியமிக்காமல் இருந்திருக்கலாம். காலம் உள்ளது, பொறுப்பு தரப்படவில்லை என்று நாங்கள்தான் கவலைப்பட வேண்டும். எங்கள் கட்சி உள் விவகாரங்களில் யாரும் தலையிட வேண்டாம்'' என்றார்.
இதையும் படிங்க: வேளாண் சட்டங்கள் நாட்டின் விவசாயக் கட்டமைப்பை அழித்துவிடும் - ராகுல் காந்தி