புதுக்கோட்டை: தேசிய தூய்மைப் பணியாளர் ஆணைய தலைவர் வெங்கடேசன், நேற்று புதுக்கோட்டையில் உள்ள பல்வேறு பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டார். முன்னதாக, புதுக்கோட்டை நகராட்சிக்கு உட்பட்ட சந்தைப்பேட்டையில் அமைந்துள்ள தூய்மைப் பணியாளர் குடியிருப்பை அவர் ஆய்வு செய்தார்.
அப்பொழுது அந்த குடியிருப்பில் கழிவறைகள் பயன்படுத்தாத நிலமையில் காணப்பட்டது. மேலும் ஜன்னல்கள், கதவுகள் ஆகியவை உடைந்தும் காணப்பட்டது. பாதாள சாக்கடை வசதி, குடிநீர் வசதி ஆகியவற்றை ஆய்வு செய்தார். இது பற்றி அப்பகுதி பொதுமக்கள் தொடர்ச்சியாக புகார் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. அப்போது நகராட்சி அலுவலர்கள் மற்றும் நகர மன்ற உறுப்பினர் ஆகியோரை கடுமையாக எச்சரித்த தேசிய தூய்மைப் பணியாளர் ஆணைய தலைவர், ஒரு மாத காலத்திற்குள் குடியிருப்பில் உள்ள குறைகளை சரி செய்ய நகராட்சிக்கு உத்தரவிட்டார்.
அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய தேசிய தூய்மைப் பணியாளர் ஆணைய தலைவர் வெங்கடேசன், "தமிழ்நாடு முழுவதும் ஒவ்வொரு மாவட்டமாக தேசிய தூய்மைப் பணியாளர் ஆணையம் ஆய்வுக் கூட்டம் நடத்தி வருகிறது. அப்பொழுது, அந்தந்த பகுதியில் உள்ள துப்புரவு தொழிலாளர் பகுதி மற்றும் குடியிருப்புகளை ஆய்வு செய்வது, அவர்களது வாழ்வாதாரம், சுற்றுச்சூழல் எப்படி உள்ளது என ஆய்வு செய்வது வழக்கம்.
அதேபோல், தற்போது சந்தைப்பேட்டை துப்புரவு தொழிலாளர் குடியிருப்பை ஆய்வு செய்தேன். இங்கு புதிதாக கட்டப்பட்ட பல்வேறு குடியிருப்புகள் பயன்படுத்த முடியாத அளவிற்கு ஜன்னல்கள், கதவுகள் உடைந்து காணப்படுகிறது. மூன்று மாதத்திற்கு முன்பாக குடிவந்த ஒரு வீட்டில் கழிப்பறை பயன்படுத்த முடியாத சூழலில் உள்ளது. அதை எல்லாம் சீர் செய்து தர வேண்டும் என நகராட்சிக்கு பரிந்துரை செய்துள்ளோம்.
தேசிய தூய்மைப் பணியாளர் ஆணையம் பற்றிய விழிப்புணர்வு தமிழ்நாட்டில் சரிவர யாருக்கும் தெரியவில்லை. எங்களிடம் என்ன புகார் தர வேண்டும், எப்படி புகார் அளிக்க வர வேண்டும், என்ன கோரிக்கைகள் தர வேண்டும் என தெரியவில்லை. அதனால் எங்கள் ஆய்வு கூட்டம் நடக்கும் பொழுது எங்கள் ஆணையத்தின் புகார் பிரிவு எண் இ-மெயில் முகவரி ஆகியவற்றைத் தந்து செல்வோம். இது பற்றிய விழிப்புணர்வை உண்டாக்கும் பொறுப்பு தமிழக அரசுக்குதான் உள்ளது. இந்த குடியிருப்பில் வசிப்பவர்கள் மாதம் ரூ.2 ஆயிரத்து 700 வாடகை அளித்து வருகின்றனர். இங்கு வசிப்பவர்கள் பாதுகாக்கப்பட்ட சூழ்நிலையில் உள்ளனர்.
அவர்களிடம் குடியிருப்பை ஒப்படைப்பதற்கு முன்பாக, உரிய அடிப்படை வசதிகளை செய்து கொடுத்த பின் குடியிருப்பை ஒப்படைத்திருக்க வேண்டும். அவர்களுக்கு போதிய வசதியை உட்கட்டமைப்புகளை நகராட்சி நிர்வாகம் செய்து தர வேண்டும். இங்கு பலரும் அளித்த புகார் அடிப்படையில், சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் விளக்கம் கேட்டு 2 மாதத்தில் நடவடிக்கை எடுக்கப்படும்" என தெரிவித்தார்.