புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள மருத்துவர்கள், செவிலியருக்கு தற்காலிக பணிநியமன ஆணைகளை ஊழல் தடுப்புச் சட்ட அமைச்சர் எஸ்.ரகுபதி, விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் ஆகியோர் வழங்கினர். இந்நிகழ்வின் போது மாவட்ட ஆட்சியர் உமாமகேஸ்வரி உடனிருந்தார்.
பின்னர் பேசிய அமைச்சர் ரகுபதி, "கரோனா சிகிச்சைக்காக கூடுதல் மருத்துவர்கள், செவிலியரை நியமனம் செய்ய முதலமைச்சர் உத்தரவிட்டார். அதனடிப்படையில் புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குத் தேர்வு செய்யப்பட்ட மருத்துவர்கள், செவிலியருக்கு தற்காலிக பணி நியமன ஆணை வழங்கப்பட்டுள்ளது.
புதிதாக பணி நியமனம் பெற்றுள்ள மருத்துவர்கள் கரோனா நோயாளிகளுக்கு சிறந்த முறையில் சிகிச்சையளித்து குணப்படுத்தவும், இப்பணியில் சிறப்பாக செயல்படவும் எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்" எனத் தெரிவித்தார்.