புதுக்கோட்டை: மாங்குடி கிராமத்தைச் சேர்ந்த வடிவேல் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதில், "புதுக்கோட்டை மாவட்டம், மாங்குடி கிராமத்தில் அருள்மிகு அடைக்கலம் காத்த அய்யனார் மற்றும் ஸ்ரீ கரளய மருத அய்யனார் என்ற பிரசித்தி பெற்ற கோயில் உள்ளது. ஆண்டுதோறும் தமிழ் மாதமான சித்திரை மாதத்தின் போது ஆலயத் திருவிழாவை மிகச் சிறப்பாக நடத்திக் கொண்டாடுவது வழக்கம். இதைத்தொடர்ந்து திருவிழாவின்போது மாங்குடி, மண்ணவேல்மாபட்டி, ஆயிபட்டி, அகரப்பட்டி ஆகிய கிராம மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து மன்னவேலம்பட்டி கிராமத்தில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்துவது வழக்கம்.
அதன் அடிப்படையில் இந்த ஆண்டு வருகின்ற 15ஆம் தேதி தமிழ் சித்திரை தினத்தை முன்னிட்டு கோவில் திருவிழாவினை நடத்தி மன்னவேலம்பட்டி கிராமத்தில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்த திட்டமிட்டுள்ளோம். மேலும் அரசின் ஆணைப்படி ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் காளைகள் மற்றும் வீரர்களுக்கு போதிய மருத்துவ வசதிகள் குடிநீர் போன்ற அடிப்படை வசதிகள் மற்றும் ஜல்லிக்கட்டுக்கான குழுக்களை அமைத்து பாதுகாப்பான முறையில் அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது.
ஜல்லிக்கட்டு போட்டி நடத்துவதற்கு அனுமதி கோரி 01.03.2023 அன்று புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுக்கப்பட்டது. மாவட்ட ஆட்சியர் தேவையான விசாரணையை நடத்தி அறிக்கையைச் சமர்ப்பிக்குமாறு வருவாய் கோட்ட அலுவலர் தாசில்தாரை நியமித்தார். ஜல்லிக்கட்டு போட்டி நடத்த அனுமதி கேட்ட மனுவின் அடிப்படையில் போட்டி நடைபெறும் மன்னவேலம்பட்டி கிராமத்திற்கு அதிகாரிகள் சென்று பார்வையிட்டு ஜல்லிக்கட்டு விழாவை முழுமையாக நடத்த அனுமதி வழங்க பரிந்துரைக்கப்பட்டது.
ஆனால், தாசில்தார் அனுப்பிய மேற்படி அறிக்கை வருவாய் கோட்ட அலுவலரிடம் நிலுவையில் உள்ளது. இந்நிலையில் ஜல்லிக்கட்டு நடத்துவதற்கான தேதி நெருங்கி வருகிறது என்றும் ஏற்கனவே ஜல்லிக்கட்டு போட்டி நடத்துவதற்கு போதுமான ஏற்பாடுகளை செய்துள்ளோம் எனவும் 500க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்க வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்தார். மேலும் திருவிழாவிற்காக பெரும் தொகைச் செலவு செய்யப்பட்டுள்ளதாகவும் ஆனால் அனுமதி வழங்காமல் காலதாமதம் செய்வதால் கிராம மக்கள் அனைவரும் கடும் மனவேதனைக்கும் சிரமத்திற்கும் ஆளாகியுள்ளனர்.
எனவே, புதுக்கோட்டை மாவட்டம் மன்னவேலம்பட்டி கிராமத்தில் ஜல்லிக்கட்டுப் போட்டி நடத்த அனுமதி கோரிய மனுவை விரைவாக பரிசீலிக்க உத்தரவிட வேண்டும்." என மனுவில் கூறியிருந்தார். இந்த மனு நீதிபதிகள் சுப்பிரமணியன் விக்டோரியா கௌரி ஆகியோர் அடங்கிய அமர்வின் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் ஜல்லிக்கட்டு போட்டி நடத்துவது குறித்து தாசில்தார் மற்றும் வருவாய் கோட்ட அலுவலர் ஆகியோர் அறிக்கையின் அடிப்படையில் மனுதாரரின் மனுவை பரிசீலனை செய்து ஏப்ரல் 14ஆம் தேதிக்குள் உத்தரவு பிறப்பிக்க வேண்டும் எனக் கூறி வழக்கை முடித்து வைத்தனர்.
இதையும் படிங்க: "அடக்குமுறையால் எங்களை அடக்க முடியாது" - ராகுலுக்கு ஆதரவாக சீறிய கரூர் எம்.பி ஜோதிமணி!