புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி தாலுகா இடையாத்தூர் கிராமத்தைச் சேர்ந்த மிறாஸ் முருகேஷ் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல்செய்த மனுவில், "புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி தாலுகா இடையாத்தூர் கிராமத்திலுள்ளது ஸ்ரீ பொன்மாசிலிங்க அய்யனார் திருக்கோயில்.
இத்திருக்கோயிலில் வருடம்தோறும் மகாசிவராத்திரி விழா மிக சிறப்பாக கொண்டாடப்படும். மேலும் மகா சிவராத்திரிக்கு மறுநாள் ஜல்லிக்கட்டு போட்டியானது நடைபெறுவது வழக்கம்.
இந்தாண்டு மார்ச் 12ஆம் தேதி மகா சிவராத்திரி விழா இத்திருக்கோயிலில் மிகச் சிறப்பாகக் கொண்டாடப்பட உள்ளது. மறுநாளான மார்ச் 13ஆம் தேதி ஜல்லிக்கட்டுப் போட்டி நடைபெற உள்ளது. ஜல்லிக்கட்டுப் போட்டி நடத்துவதற்கு புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரிடம் ஜனவரி 20ஆம் தேதி அனுமதி கேட்டு மனு அளித்தோம்.
தேர்தல் நடக்க இருப்பதால் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அனுமதி அளிக்க மறுப்புத் தெரிவித்தார். எனவே, ஆண்டுதோறும் நடைபெறும் ஜல்லிக்கட்டுப் போட்டியை புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி தாலுகா இடையாத்தூர் கிராமத்தில் இந்த ஆண்டும் நடத்த உத்தரவிட வேண்டும்” எனக் கூறியிருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் எம்.எம். சுந்தரேஷ், ஆனந்தி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியை அமைதியான முறையில், தேர்தல் விதிமுறைகளைப் பின்பற்றி எந்தப் பரிசுப் பொருள்களும் வழங்காமல் நடத்த அனுமதி வழங்கி உத்தரவிட்டனர்.
இதையும் படிங்க:தொடங்கியது யக்ஷா கலைத் திருவிழா