விவசாயிகள் பரிந்துரைக்கப்பட்டுள்ள வேர் மண்டல நீர் பாசன முறையை பயன்படுத்தி குறைந்த நீரில் அதிக மகசூல் பெற்று பயனடைய வேண்டும் என புதுக்கோட்டையில் வருவாய் நிர்வாக ஆணையர் சத்ய கோபால் பேட்டியளித்தார். அப்போது அவர் தெரிவித்ததாவது:
2018ஆம் ஆண்டு தமிழ்நாடு முதலமைச்சரால் தொடங்கிவைக்கப்பட்ட இ-அடங்கல் முறை வருவாய், பேரிடர் மோலண்மைத் துறையின் மூலம் செயல்படுத்தப்படுகிறது. இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் இ-அடங்கல் முறை முதல் முறையாக அமல்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் விவசாயிகளுக்கு அரசின் திட்டங்கள், சலுகைகள் விரைந்து சென்று பயனடையும் வகையில் இந்த இ-அடங்கல் முறை அமைந்துள்ளது.
![புதுக்கோட்டை](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/tn-pdk-03-23-mrsathyagopalbyte-visual-7204435_23062019145459_2306f_1561281899_610.jpg)
விவசாய நிலங்களின் அடங்கல்கள் தற்பொழுது வருவாய்த் துறையினரால் பதிவேடுகளில் பராமரிக்கப்பட்டு வரும் நிலத்தினுடைய அடங்கல் முழுமையாகக் கணினிமயமாக்கப்படுகிறது. விவசாயிகள் இ-அடங்கல் முறையில் தங்கள் நிலத்தில் பயிரிடப்பட்டுள்ள விவரத்தினை தாங்களே பதிவேற்றம் செய்து கொள்ளலாம்.
அரசின் திட்டங்கள், சலுகைகளை விரைந்து பெற்றிட இ-அடங்கல் பதிவேற்றம் அவசியமான ஒன்றாகும். இது குறித்த விழிப்புணர்வை விவசாயிகளுக்கு ஏற்படுத்தும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
2018ஆம் ஆண்டு நவீன முறையில் குறைந்த நீரைப் பயன்படுத்தி அதிக பலனை அளிக்கும் வகையில் வேர் மண்டல நீர் பாசன முறையில் நட்டு பராமரிக்கப்பட்டுவரும் மரக்கன்றுகள் ஆய்வு செய்யப்பட்டது.
சாதாரணமான முறையில் நட்டு பராமரிக்கப்பட்டுவரும் மரக்கன்றுகளை விட மேற்கண்ட நவீன முறையைப் பயன்படுத்தி நட்டு பராமரிக்கப்பட்டு வரும் மரக்கன்றுகளின் ஒட்டு மொத்த வளர்ச்சி, மகசூல் ஆச்சரியப்படும் வகையில் இரண்டு மடங்கு அதிகமாக உள்ளது. இதற்குக் குறைந்த அளவு நீரைக் கொண்டு அதிக மகசூல் அளிக்கும் வகையில் இந்த முறை அமைந்துள்ளது.