அணைக்கட்டு: வேலூர் மாவட்டம் அணைக்கட்டு தாலுகா அலுவலகத்தில் நேற்று (மார்ச் 10) வட்டாட்சியர் ரமேஷ் தலைமையில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. இதில் பல்வேறு துறைகளை சேர்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர். அப்போது விவசாயிகளுக்காக அரசு செயல்படுத்தும் திட்டங்கள், அதன் பயன்கள் ஆகியவற்றை எடுத்துரைத்தனர்.
இந்நிலையில் பொய்கை பாலாற்று பகுதியில் அளவுக்கு அதிகமாக மணல் கடத்தப்படுவதாக விவசாயிகள் குற்றம்சாட்டினர். அரசு அனுமதிக்கும் அளவை விட, 30 மடங்கு அதிகமாக சுரண்டப்படுவதாகவும், இதனால் வேளாண்மை வெகுவாக பாதிக்கப்படுகிறது என்றும் புகார் தெரிவித்தனர். வரும் மாதங்கள் கோடை காலம் என்பதால், நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக குறைய வாய்ப்புள்ளது என்றும், மணல் கடத்தலை தடுக்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர்.
தொடர்ந்து பேசிய அதிகாரிகள், "வேளாண்துறையில் 3 வகையான மா செடிகள் இலவசமாக வழங்கப்படுகின்றன. 2.5 ஏக்கர் பரப்பளவு உள்ள நிலத்துக்கு 150 செடிகள் கொடுக்கப்படுகின்றன. இதற்கான ஆவணங்களை சமர்ப்பித்து விவசாயிகள் பெற்றுக் கொள்ளலாம். மேலும் 5 வகையான பயிர்களுக்கு காப்பீட்டு திட்டம் உள்ளது. இதை விவசாயிகள் பயன்படுத்திக் கொள்ளலாம்" என்றனர்.
தொடர்ந்து பேசிய வட்டாட்சியர் ரமேஷ், "அணைக்கட்டு தாலுகாவுக்கு உட்பட்ட பகுதிகளில் அரசு புறம்போக்கு நிலத்தில் இருக்கும் சீமை கருவேல மரங்களை யார் வேண்டுமானாலும் இலவசமாக வெட்டி எடுத்துக் கொள்ளலாம். சீமைக் கருவேல மரங்கள் தேவைப்படுவோர், அதற்கான ஒப்புதல் படிவம் பெற்று இலவசமாக எடுத்துக் கொள்ளலாம்" என குறிப்பிட்டார்.
நீரை அதிகம் உறிஞ்சும் தன்மை கொண்ட சீமைக் கருவேல மரங்களை அழிக்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பெரும்பாலும் வறட்சிக்கு இவ்வகை மரங்களே காரணம் என கூறப்படுகிறது. எனினும் ஒரு சில இடங்களில் சீமைக் கருவேல மரங்களை வெட்டி, அதை மூட்டம் போட்டு கரியாக்கி விவசாயிகள் வருவாய் ஈட்டி வருகின்றனர். ஒருபுறம் இவ்வகை மரங்களால் விவசாயம் பாதிக்கப்பட்டாலும், மற்றொரு புறம் பலன் தரும் மரமாக உள்ளது.
ராமநாதபுரம் மாவட்டத்தில் பெரும்பாலும் பெரிய அளவில் மழை பெய்யாததால் சாயல்குடி, கடலாடி, முதுகுளத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்தால் மட்டுமே வேளாண்மை நடைபெறும். இங்கு பருத்தி, வத்தல் ஆகிய பயிர்கள் சாகுபடி செய்யப்படுகின்றன. ஒருவேளை மழை பெய்யாவிட்டால், விவசாயிகள் தங்கள் நிலங்களில் வளர்ந்துள்ள சீமைக் கருவேல மரங்களை வெட்டி அதை மூட்டம் போட்டு கரியாக்கி வருவாய் ஈட்டுகின்றனர். பொதுவாக சீமைக் கருவேல மரங்கள் நிலத்தின் ஆழத்துக்கு ஊடுருவி சென்று தண்ணீரை உறிஞ்சுவதால், பிற தாவரங்களுக்கு நீர் கிடைக்கவிடாமல் வளர்ச்சியை தடை செய்கிறது.