புதுக்கோட்டை: கறம்பக்குடியை சேர்ந்தவர் சண்முகம். இவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பொது நல மனு ஒன்றை தாக்கல் செய்தார்.
அதில், "பட்டத்திக்காடு கிராமத்தின் பிரதான தொழில் விவசாயமே. இங்கு செயல்பட்டு வந்த நேரடி நெல் கொள்முதல் நிலையம் தற்போது செயல்படவில்லை. இதனால் நெல் மூட்டைகளை அருகிலுள்ள புதுப்பட்டி கருக்ககுறிச்சி கிராமத்திற்கு கொண்டு சென்று விற்பனை செய்ய வேண்டியுள்ளது.
இதன் காரணமாக எங்களது நெல் மூட்டைகளுக்கு உரிய விலை கிடைப்பதில்லை. ஆகையால் பட்டத்திக்காடு கிராமத்தில் செயல்பட்டு வந்த நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை மீண்டும் திறக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த மனு நீதிபதிகள் துரைசுவாமி, முரளிசங்கர் அமர்வு முன்பு இன்று (அக்.21) விசாரணைக்கு வந்தது.
வழக்கை விசாரித்த நீதிபதிகள், புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டனர். மேலும் வழக்கு விசாரணையை 6 வாரங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டது.
இதையும் படிங்க: விவாகரத்து கிடைக்காத விரக்தி - மனைவிக்கு மாப்பிள்ளை பார்த்த கணவன்