புதுக்கோட்டை: அன்னவாசல் அருகே உள்ள மெய்வழிச்சாலை கிராமத்தில் 65 ஆண்டுகளுக்கு மேலாக சாதி, மத பேதமின்றி சமத்துவப்பொங்கல் கொண்டாடப்படுகிறது. 1942-ம் ஆண்டு 69 சாதி மதங்களைச் சேர்ந்த மக்கள் ஒன்றிணைந்து மெய்வழிச்சாலை என்ற அமைப்பாக உருவாகி, அங்கே சமத்துவத்தோடு வசித்து வருகின்றனர்.
சாலை ஆண்டவரையே அம்மக்கள் தெய்வமாக வழிபட்டு வருகின்றனர். தமிழர்களின் பாரம்பரிய முறைப்படியே வாழ்ந்துவரும் அம்மக்கள் தீபாவளி பண்டிகையினை கொண்டாடுவதில்லை. தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையை மட்டுமே அவர்கள் ஆண்டுதோறும் விமர்சையாக கொண்டாடுவது வழக்கம். அதேபோல், இந்த ஆண்டும் மெய்வழிச்சாலையில் பொங்கல் விழா இன்று களைகட்டியது.
அங்கு வசிக்கும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்ப மக்கள் முற்றும் பல்வேறு பகுதிகளில் வசித்து வரும் மெய்வழி ஆண்டவரை வழிபடும் மக்களும் தமிழர்களின் பாரம்பரிய உடையணிந்து செங்கனி கரும்பு, செவ்வாழை மற்றும் இளநீரில் தோரணம் அமைத்து புதுநெல் புத்தரிசி, தித்திக்கும் வெல்லமிட்டு புதுப்பானையில் பொங்லிட்டு அம்மக்கள் சாலை ஆண்டவரை வணங்கினர்.
இப்பொங்கல் விழாவில் தமிழ்நாடு மட்டுமின்றி, இந்தியா முழுவதில் இருந்தும் பல்வேறு மொழிபேசும் மக்கள் சாதி மதபேதம் கடந்து சமத்துவத்தோடு பொங்கலிட்டு மகிழ்ந்தனர். முன்னதாக சாலைஆண்டவர் ஆலயத்திற்கு முன்பாக சபைக்கரசர், மெய்வழிச்சாலை வர்க்கவான் கொடியேற்றி, பொங்கல் வைப்பதற்காக மக்களுக்கு புனித தீர்த்தம் வழங்கி, பொங்கல் விழாவை தொடங்கி வைத்தார்.
இதையும் படிங்க: "தை பிறந்தாச்சு..வழி பிறந்தாச்சு" - தைப்பொங்கல் சொல்லும் மாண்பு