புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அரசு மருத்துவமனையில் ரத்த பரிசோதனை மையத்தில் சீனிவாசன் என்பவர் பணிபுரிந்து வருகிறார். நேற்று பணிக்கு மதுபோதையில் வந்திருந்த சீனிவாசன், வேலை நேரம் என்றும் பார்க்காமல் ரத்தம் பரிசோதனை செய்யும் அறையை தாப்பாள் போட்டு உறங்கியுள்ளார்.
இந்நிலையில், ரத்தப் பரிசோதனை செய்வதற்காக வந்திருந்த 40க்கும் மேற்பட்ட நோயாளிகள், அறையின் கதவு சாத்தப்பட்டிருந்ததால் வெகுநேரம் வெளியில் காத்திருந்தனர். இதனிடையே, கதவு திறக்காததால் சந்தேகமடைந்த நோயாளிகள், ஜன்னல் கதவை திறந்து பார்த்தபோது உள்ளே சீனிவாசன் உறங்கிக் கொண்டிருந்தது தெரியவந்தது.
இதனையடுத்து நோயாளிகள் அனைவரும் சாத்தியிருந்த கதவை திறந்து சீனிவாசன் உறங்குவதை வீடியோவாக எடுத்தனர். சீனிவாசனை சோதித்து பார்த்ததில் மதுபோதையில் இருப்பதையும் கண்டறிந்தனர். உடனடியாக இதுகுறித்து ரத்தப் பரிசோதனை சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் நோயாளிகள் அனைவரும் புகாரளித்தனர்.
அப்போது ஆத்திரமடைந்த நோயாளிகள், போதையில் உறங்கிய சீனிவாசனை எழுப்பி விரட்டியடித்தனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. மேலும், ரத்தப் பரிசோதனை சம்பந்தப்பட்ட இடத்தில் குடிபோதையில் இருக்கும் நபரை பணியில் அமர்த்தினால் மக்களின் நிலை என்னவாகும். நோயாளிகளின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் நிலை உருவாகும் என்றும் தெரிவித்தனர்.
தற்போது, குடிபோதையில் சீனிவாசன் உறங்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.