புதுக்கோட்டை மாவட்டம் அரிமளம் அருகே உள்ள குறிச்சி கிராம சுருக்கான்குடி கண்மாய் பகுதியில் கடந்த 2015ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் கால்கள் கட்டப்பட்ட நிலையில், ஆண் சடலம் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த கொலை சம்பந்தமாக அப்போது காவல்துறை வழக்குப் பதிந்து நடத்திய விசாரணையில், இறந்தவர் சென்னை செம்மஞ்சேரி சேர்ந்த பாலு (54) என தெரியவந்தது. இதனைத்தொடர்ந்து காவல்துறையினர் 2 தனிப்படைகள் அமைத்து குற்றவாளிகளான சென்னையைச் சேர்ந்த அப்துல் காதர் (43), தஞ்சாவூரைச் சேர்ந்த பிரபு (36), மணிகண்டன் (30) உஷா ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இதில் முக்கிய குற்றவாளியான தஞ்சாவூரைச் சேர்ந்த தங்கராஜ் (45) தலைமறைவாகி மாலத்தீவுக்கு தப்பி ஓடிவிட்டார். பாலு கொலை வழக்கு சம்பந்தமாக குற்றவாளிகளிடம் நடத்திய விசாரணையில் பாலு, அப்துல் காதர், உஷா ஆகியோர் மீது பெங்களூரு, பாண்டிச்சேரி, கடலூரில் உள்ள காவல் நிலையங்களில் செக் மோசடி வழக்கு பதியப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தது. இதில் அப்துல்காதர், உஷா ஆகியோரை கைது செய்ய பாலு காவல்துறைக்கு உதவி செய்ததாக தெரிகிறது. இதில் ஆத்திரம் அடைந்த உஷா, அப்துல் காதர் தனது நண்பர்களுடன் கூட்டு சேர்ந்து பாலுவை கொலை செய்து அரிமளம் அருகே உள்ள கம்மாயில் போட்டு விட்டு தப்பியோடி உள்ளனர்.
இதனைத் தொடர்ந்து கே புதுப்பட்டி காவல்துறை உடலை கைப்பற்றி நடத்திய விசாரணையில், இறந்த உடல் சென்னையைச் சேர்ந்த பாலு என குடும்பத்தார் முன்னிலையில் உறுதி செய்தனர். இந்நிலையில் இந்த வழக்கில் தொடர்புடைய தங்கராசு வெளிநாட்டுக்கு தப்பியோடிய நிலையில் அவர் மீது லுக் அவுட் நோட்டீஸ் (தேடப்படும் குற்றவாளி) அளிக்கப்பட்டது.
இதனிடையே, மாலத்தீவில் இருந்து கேரளா திருவனந்தபுரம் ஏர்போர்ட்டிற்கு வந்த தங்கராசுவை இந்திய குடியுரிமை அலுவலர்கள் கைது செய்து சிறையில் அடைத்தனர். பொன்னமராவதி ஆய்வாளர் கருணாகரன் தலைமையில் தனிப்படை கேரளா சென்று தங்கராசுவை கைதுசெய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க:கணவரை இழந்த மனைவி! அமெரிக்கா செல்ல அரசிடம் விசா கோரி வேண்டுகோள்