புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம், நார்த்தாமலை அருகே உள்ள பொம்மாடி மலைக்கிராமத்தின் மேமலை எனும் இடத்தில் சட்டவிரோதமாக கல்குவாரி செயல்படுவதாக கீரனூர் போலீசாருக்குத் தகவல் கிடைத்தது.
இந்த தகவலின் அடிப்படையில் அங்கு சென்ற, கீரனூர் காவல் ஆய்வாளர் சாமுவேல் மற்றும் உதவி ஆய்வாளர் யோக ரத்தினம் தலைமையிலான போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். போலீசாரைக் கண்டதும் அங்கு பணியில் இருந்த பணியாளர்கள் வெடி மருந்துகளை அங்கேயே போட்டுவிட்டு தப்பி ஓடினர்.
இதனையடுத்து அந்த கல்குவாரிகளில் பாறைகளை வெடிவைத்து தகர்ப்பதற்காக அங்கு சட்ட விரோதமாக பதுக்கி வைக்கப்பட்டிருந்த 32 டெட்டனேட்டர் குச்சிகள், 20 ஜெலட்டின் குச்சிகள், திரிகள் உள்ளிட்ட வெடி பொருட்கள், 1 ஹிட்டாச்சி வாகனம், 2 ஜெனரேட்டர்கள், பத்திற்கும் மேற்பட்ட பம்பு செட் மோட்டார்கள் உள்ளிட்டவற்றைப் பறிமுதல் செய்த போலீசார் இது குறித்து வருவாய்த்துறையினருக்குத் தகவல் கொடுத்தனர்.
அதன் அடிப்படையில் அங்கு வந்த சத்தியமங்கலம் கிராம நிர்வாக அலுவலர் வெங்கடேசன் சட்டவிரோத கல்குவாரி செயல்பட்டது குறித்து விசாரணை மேற்கொண்டார். அந்த இடத்தில் முருகேசன் என்பவருக்குச் சொந்தமான ஒரு ஏக்கர் பரப்பளவிலான பகுதியில் கடந்த ஒரு மாத காலமாக சட்டவிரோத கல்குவாரி செயல்பட்டு வந்ததும், அதேபோல் அருகே 5 ஏக்கர் பரப்பளவில் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்பட்டு வந்த கல்குவாரியின் அனுமதியை கனிமவளத்துறையினர் ரத்து செய்தபோதிலும் அந்தப் பகுதியிலும் தற்போது சட்ட விரோதமாக கல்குவாரி செயல்பட்டு வந்ததும் வருவாய்த் துறையினரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதைத்தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து போலீசாரும் வருவாய்த்துறையினரும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: கனமழைப் பாதிப்பு: மயிலாடுதுறையில் முதலமைச்சர் நேரில் ஆய்வு!